ஒண்ணா இருக்க கத்துக்கணும் படத்தில் நடிக்க கவுண்டமணி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இறந்தவர்களின் உடலை தகனம் செய்யும் தொழிலில் ஒருவருக்கு எவ்வளவு பணம் கிடைத்துவிடும்? மிகவும் சொற்பமாகவே தருவார்கள். அத்துடன் மரியாதையும் கிடையாது. சோறுக்கு வீடுவீடாக தட்டேந்தி திரிய வேண்டும். அப்படித்தான் சமூகம் அவர்களை வைத்திருக்கிறது. மின்மயானங்களின் வரவுக்குப் பிறகு நிலைமை பரவாயில்லை.
90 களில் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க பெரும்பாலானவர்கள் முன்வருவதில்லை. பாலா போன்றவர்கள் வந்த பிறகே நிலைமை மாறியிருக்கிறது. அவர்களுக்கு முன்னால், வெட்டியான், ஈயம் பூசுகிறவன், பூம்பூம் மாட்டுக்காரன் என்று விளிம்புநிலை கதாபாத்திரங்களில் நடித்தவர் கவுண்டமணி மட்டுமே.
வி.சேகர் 1992 ல் ஒண்ணா இருக்க கத்துக்கணும் படத்தை எடுத்த போது, அதில் வரும் சுடலை என்ற வெட்டியான் கதாபாத்திரத்தில் நடிக்க கவுண்டமணியை தேர்வு செய்தார். அந்தப் படத்தில்தான் அந்தப் புகழ்பெற்ற காட்சி இடம்பெற்றது. கவுண்டமணி தனது மகனை அழைத்துக் கொண்டு, பள்ளிக்கூடத்திற்கு சென்று கொண்டிருப்பார். வழியில் அய்யர் எஸ்.எஸ்.சந்திரன் எதிர்படுவார்.
“குழந்தைய அழைச்சுண்டு எங்க போறேள்..?” – எஸ்.எஸ்.சந்திரன் கேட்க,
“என் பையன் பள்ளிக்கூடத்துக்கு படிக்கப் போறான் சாமி” என்பார் கவுண்டமணி.
“உன் பையனெல்லாம் பள்ளிக்கூடத்துல படிச்சா, உனக்கு அடுத்து வெட்டியான் வேலை பார்க்குறது யாரு…?”
“கொஞ்ச நாளைக்கு நீயும் உன் புள்ளையும் பாருங்க…”
இந்தக் காட்சி இப்போதும் ரசித்துப் பார்க்கப்படுகிறது.
ஒண்ணா இருக்க கத்துக்கணும் படத்தின் போது கவுண்டமணி பீக்கில் இருந்தார். நாள் கணக்கில்தான் சம்பளம். ஒண்ணா இருக்க கத்துக்கணும் படத்தில் ஒரு நாளைக்கு அவருக்கு சம்பளம் இரண்டு லட்சங்கள். அந்தப் படத்தில் அனைவரையும்விட அதிக சம்பளம் வாங்கியவர் அவர்தான். இது 32 வருடங்களுக்கு முந்தைய கதை. வெட்டியான் கவுண்டரின் சம்பளத்தை கேட்டால் இப்போதும் கிறுகிறுக்கிறது இல்லையா!