தங்கைக்காக களத்தில் இறங்கிய அண்ணன்..! கனிமொழியை ஆதரித்து வீதிவீதியாக நடந்தே வாக்கு சேகரித்த ஸ்டாலின்
ஸ்டாலின் பிரச்சார பயணம்
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதியையும் திமுக கூட்டணி கைப்பற்ற வேண்டும் என திட்டத்தோடு திமுக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு மீதமுள்ள 21 தொகுதிகளில் திமுக களம் இறங்குகிறது. இதனையடுத்து திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும் முதலமைச்சர் ஸ்டாலினும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின், பெரம்பலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி தொகுதிகளிலும் முதல்வர் பிரச்சாரம் செய்தார்.
தூத்துக்குடியில் ஸ்டாலின் பிரச்சாரம்
இதனை தொடர்ந்து இன்று மார்ச் 26ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம் தொகுதிகளிலும், மார்ச் 27ம் தேதி தென்காசி, விருதுநகர் தொகுதிகளிலும், மார்ச் 29ம் தேதி தருமபுரி, கிருஷ்ணகிரி தொகுதிகளிலும், மார்ச் 30-ம் தேதி சேலம், கள்ளக்குறிச்சி தொகுதிகளிலும் முதல்வர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதனிடையே இன்று காலை தனது தங்கையும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் காமராஜர் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி அவர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அந்த பகுதியில் மீனவர் மக்களிடம் சந்தித்து வாக்கு சேகரித்தார்.
கனிமொழியை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம்
தமிழ்நாடு முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் லயன்ஸ் டவுன் பகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்த போது அந்த பகுதி உள்ள ஒரு வீட்டில் அவரை தங்கள் வீட்டில் வந்து தேனீர் அருந்த அழைப்பு விடுத்தனர். இதை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் அந்த இல்லத்திற்கு சென்று தேனீர் அருந்தினார். மேலும் வழி நெடுக ஏராளமான மக்கள் ஸ்டாலினை சந்தித்து தேர்தலில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து செல்பி எடுத்துக்கொண்டனர்.