தேர்தல் முடிந்தவுடன் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை; உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து கீழ்பென்னாத்தூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், இந்த தொகுதியில் போட்டியிடும் சி.என்.அண்ணாதுரை கடந்தாண்டு 3 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.

நாம் 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தோம். இருப்பினும் தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்று முதல் கையெழுத்து கட்டணமில்லாமல் பெண்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்யக்கூடிய திட்டம் தான். அந்த திட்டம் தற்பொழுது பெண்கள் அனைவரும் இலவச பேருந்து என்று கூறுவது கிடையாது. அது ஸ்டாலின் பேருந்து என கூறுகின்றனர். அதுமட்டுமின்றி தேர்தல் அறிக்கையில் சொல்லாத ஒரு திட்டத்தையும் தமிழக முதல்வர் நிறைவேற்றியுள்ளார்.

1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டம். மாணவர்கள் பட்டினியுடன் பள்ளிக்கு செல்லக்கூடாது என்ற நோக்கத்துடன் சாப்பிட்டுவிட்டு படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தத் திட்டத்தை தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரு நாளைக்கு 18 லட்சம் குழந்தைகள் காலை உணவு திட்டத்தின் கீழ் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு செல்கிறார்கள்.

காலையில் வேலைக்கு செல்லக்கூடிய பெற்றோர்கள் தன் குழந்தை சாப்பிட்டதா? என்ற கவலை இருந்ததாகவும் தற்பொழுது தாய்மார்களுக்கு அந்த கவலை இல்லை. தனது குழந்தையை பார்த்துக் கொள்வதற்கு தமிழக முதல்வர் இருக்கிறார் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். திராவிட மாடல் அரசும், நமது முதல்வரும் குழந்தையை பார்த்துக் கொள்வார்கள். தரமான உணவளிப்பார் என இருப்பதாகவும் பெருமிதமாக பேசினார்.

அரசுப் பள்ளியில் படித்து எந்த கல்லூரியில் சென்று உயர்கல்வி படித்தாலும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் இதுவரை 3 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டமான மகளிர் உரிமை திட்டத்தின் மூலமாக 1 கோடியே 16 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தில் தற்போது ஒரு சில குறைபாடுகள் உள்ளன. ஒரு சிலருக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என்கிறார்கள். இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் 1 கோடி 60 லட்சம் மகளிர் மட்டுமே.

இதில் 1 கோடியே 16 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் அனைத்து மகளிர்க்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டை விட 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சி என் அண்ணாதுரை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வருகிற ஜூன் மூன்றாம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூறாவது பிறந்த நாளாகும். அதற்கு அடுத்த நாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கடந்த முறை 39 தொகுதிகளில் 38 தொகுதி வெற்றி பெற்றோம். ஆனால் இந்த முறை 40க்கு 40 வெற்றி பெற்று கலைஞர் பாதத்தில் வெற்றியை சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *