பனங்கிழங்கை அரைத்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால்…
மார்கழி மாசம் தொடங்கி தை, மாசி வரை பனங்கிழங்கு சீசன் என்று சொல்வார்கள். அந்த மாதங்களில் பனங்கிழங்கு அதிகமாக நமக்கு கிடைக்கும்.
இதனைச் சாப்பிடுவதால் நமக்கு பலம் கூடுகிறது.
பனைமரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு. அதனை வெட்டாமல் மரத்திலேயே விட்டு விட்டால் அந்த நுங்கு நன்றாக பழுத்து பனம்பழமாகி விடும். இந்த பனம்பழத்தினை எடுத்து வெட்டி நிலத்தில் குழி தோண்டி புதைத்து அதில் வளர்த்து வந்தால் கிடைப்பது தான் பனங்கிழங்கு.
பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால், உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.
பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால், உடல் உறுப்புகள் பலம் பெறும். பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும். பனங்கிழங்கு வாயு தொல்லை உடையது.
எனவே இதை தவிர்க்க பனங்கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம். இனிப்பு தேவைப்படுகிறவர்கள் கருப்பட்டி சேர்த்து இடித்து சாப்பிடலாம்.
பனங்கிழங்கில் நார் சத்தும் அதிகம் இருப்பதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூமியில் இருந்து பனங்கிழங்கை பிரித்தெடுக்கும் போது, விதையில் இருந்து தவின் கிடைக்கும். தவின் சாப்பிட்டால் வயிற்று வலி, ஒற்றை தலைவலி உள்ளிட்ட நோய்கள் குணமாகும்.
வயிறு, மற்றும், சிறுநீர் பாதிப்பு பிரச்சினை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
பனங்கிழங்கில் பித்தம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. எனவே இதைச்சாப்பிட்டப் பின் மிளகு ஐந்து எடுத்து வாயில் போட்டு மென்றுவிட வேண்டும். மற்றபடி பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு வலு கிடைப்பதுடன், ஆரோக்கியம் உண்டாகும்.