Benzodiazepine: கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் மாத்திரையால் கருச்சிதைவு அபாயம் – ஆய்வு தகவல்!
கர்ப்பகாலத்தில் பதற்றம் மற்றும் தூக்கமின்மையால் தவிக்கும் பெண்களுக்கு சிகிச்சையளிக்க பென்சோடியா செபைன் (Benzodiazepine) மாத்திரை வழங்கப்படும்.
ஆனால், இந்த மாத்திரையைப் பயன்படுத்துவது கருச்சிதைவை ஏற்படுத்தும் அபாயத்தோடு தொடர்புடையது என ஆய்வு ஒன்று குறிப்பிட்டுள்ளது.
கருவுற்ற முதல் 8 வாரங்கள் முதல் கர்ப்பத்தின் 19 வது வாரத்துக்கு இடையில் ஏற்படும் கரு இழப்பு, `கருச்சிதைவு’ என வரையறுக்கப்படுகிறது.
தேசிய தைவான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பென்சோடியாசெபைன் மாத்திரைக்கும், கருச்சிதைவுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்தார்கள்.
2004 முதல் 2018-க்கு இடைப்பட்ட காலத்தில் கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களிடம் இது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 19 லட்சத்துக்கும் அதிகமான பெண்களில் சுமார் 3,067,122 கர்ப்பங்கள் குறித்துக் கணக்கிடப்பட்டது. இதில் 4.4% கருச்சிதைவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
பென்சோடியாசெபைன் மாத்திரையை எடுத்துக்கொள்ளும் கர்ப்பிணிகளிடம் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த னர்.
இந்தநிலையில் கர்ப்பகாலத்தில் பதற்றம் மற்றும் தூக்கமின்மைக்கு சிகிச்சையளிக்க பென்சோடியாசெபைன் மாத்திரைகளை கர்ப்பிணிகளுக்கு பரிந்துரைக்கும் முன்னர், கருச்சிதைவு குறித்த ஆபத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனச் சுகாதார நிபுணர்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆய்வு குறித்த தகவல்கள் மருத்துவ இதழான JAMA Psychiatry-ல் வெளியிடப்பட்டுள்ளது.