கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாமரங்கள் பராமரிப்பு பணியில் விவசாயிகள் தீவிரம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா மரங்கள் பராமரிக்கும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பூச்சிகளைக் கட்டுப் படுத்த உரிய ஆலோசனைகள் மற்றும் தரமான மருந்துகளை விநியோகம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ஊத்தங்கரை, பர்கூர், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, காவேரிப் பட்டணம், சூளகிரி, ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மா ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
உள் நாட்டு ரகங்கள்: இதில், மல்கோவா, அல்போன்ஸா, செந்தூரா, பீத்தர் ஆகிய உள் நாட்டு ரகங்கள் வெளிநாட்டுச் சந்தைகளில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், ஊறுகாய், ஜூஸ் தயாரிக்கவும் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன. மாவட்டத்தின் வளர்ச்சிக்கு மா விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக மா விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில், தற்போது மா மரங்களைப் பராமரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பூக்கள் பூத்துள்ள மரங்களில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பனி, மழை, வெயில்: இது தொடர்பாக மா விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் சவுந்தர ராஜன், சிவ குரு ஆகியோர் கூறியதாவது: மா மரங்களில் பூக்கள் பூக்கவும், பூக்கள் பூத்துள்ள மரங்களில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தவும் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பனி, மழை, வெயில் என நிலையற்ற சீதோஷ்ண நிலை காணப்படுவதால், சில விவசாயிகள் பராமரிப்புப் பணிகளைத் தாமதப்படுத்தி வருகின்றனர்.
மேலும், பூச்சிகளைக் கட்டுப்படுத்த தரமான மருந்துகளைத் தேர்வு செய்வதில் விவசாயிகளிடையே குழப்பம் நீடிக்கிறது. குறிப்பாக, பூச்சிகளைக் கட்டுப்படுத்த மருந்துகள் ( ஒவ்வொரு நிறுவனத்தைப் பொறுத்து ) ரூ.5 ஆயிரம் முதல் ரூ.2,500 வரை உள்ளது. இந்த மருந்துகளின் செயல்பாடுகள் ஒரேமாதிரியாக உள்ளன.
கூடுதல் கவனம் தேவை: எனவே, தோட்டக்கலைத் துறையினர் தரமான மருந்துகளைப் பரிந்துரை செய்வதுடன், வல்லுநர்கள் மூலம் மாவில் கூடுதல் மகசூல் பெற தொடர் ஆலோசனைகள் வழங்க வேண்டும். குறிப்பாக, போச்சம்பள்ளி வட்டாரத்தில் விவசாயிகள் அதிக பரப்பளவில் மா சாகுபடியில் ஈடுபட்டு வருவதால், இப்பகுதியில் தோட்டக் கலைத் துறையினர் தனிக் கவனம் செலுத்த வேண்டும். மாவட்ட, வட்டார அளவிலான கூட்டங்களை நடத்த வேண்டும்.
இதேபோல, மா சாகுபடிக்கான சிறப்புத் திட்டங்களை அரசு அறிவிக்க வேண்டும். குறிப்பாக மருந்து, உபகரணங்கள் மானிய விலையில் கிடைப் பதை உறுதி செய்ய வேண்டும். நடப்பாண்டில் (2024) மா விவசாயிகளைப் காக்க மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.