பஞ்சாப் அணிக்கு வரும் லக்னோ வீரர்.. தென்னாப்பிரிக்கா வீரரை டிரேட் செய்ய முயற்சி.. அஸ்வின் சீக்ரெட்!
பஞ்சாப் அணிக்காக ஆடி வரும் தென்னாப்பிரிக்கா நட்சத்திர வீரரான ககிசோ ரபாடாவை டிரேட் முறையில் டெல்லி மற்றும் லக்னோ அணிகள் ஒப்பந்தம் செய்ய முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் ரசிகர்களிடையே பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பஞ்சாப் அணி தரப்பில் வாங்கப்பட்ட வீரர்களை கொண்டு எப்படி பிளேயிங் லெவன் அமையும் என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். அதில் சாம் கரண், நேதன் எல்லீஸ், ரபாடா உள்ளிட்டோர் இருக்கும் போது கிறிஸ் வோக்ஸை எதற்காக அந்த அணி வாங்கியது என்றே பலருக்கும் புரியவில்லை.
அதேபோல் டெல்லி அணி தரப்பில் ரூ.9.90 கோடி பர்ஸில் மீண்டும் கொண்டு சென்றுள்ளது. இதனால் ஐபிஎல் ஏலத்திற்கு பின் வீரர்களுக்கு இடையிலான டிரேடிங் நடக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்காக ஆடி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூட்யூப் லைவில், பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா டிரேட் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தார்.
எந்த அணியுடன் டிரேட் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது என்பதும் தெரியும் என்று கூறியுள்ளார். இதனால் பஞ்சாப் அணி ரபாடாவை டிரேட் செய்யும் முயற்சியில் இருப்பது தெரிய வந்துள்ளது. 2022ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக ரூ.9.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ரபாடா அந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகளையும், கடந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
கடந்த சீசனில் காயம், ஐபிஎல் தொடருக்கு தாமதமாக வந்தது உள்ளிட்ட பிரச்சனைகளால் பஞ்சாப் அணி அவரை டிரேட் செய்ய முன் வந்திருப்பதாக தெரிய வருகிறது. அதேபோல் டெல்லி அணியில் நார்கியே, ரிச்சர்ட்சன், கலீல் அஹ்மத், இங்கிடி, முகேஷ் குமார் ஆகியோர் உள்ளனர். இதனால் இங்கிடி அல்லது ரிச்சர்ட்சன் இருவரில் ஒருவரை ரபாடாவுக்காக டிரேட் செய்ய டெல்லி அணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ரபாடா ஏற்கனவே டெல்லி அணிக்காக ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ளார். அதேபோல் லக்னோ அணி தரப்பிலும் ரபாடாவை டிரேட் முறையில் வாங்க முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது. லக்னோ அணியில் மார்க் வுட், நவீன் உல் ஹக் மற்றும் டேவிட் வில்லி ஆகியோர் வெளிநாட்டு பந்துவீச்சாளர்களாக உள்ளனர். அவர்களில் மார்க் வுட்-க்கு பதில் ரபாடாவை வாங்க முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.