இலக்கியா சீரியலில் இருந்து விலகிய ஹீமா பிந்து; என்னால் பேலன்ஸ் செய்ய முடியவில்லை என பதிவு!
இலக்கியா சீரியலில் இருந்து விலகுவதற்கான காரணம் குறித்து இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் நடிகை ஹீமா பிந்து தெரிவித்துள்ளார்.
சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று ‘இலக்கியா’. கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. டி.ஆர்.பி. ரேட்டிங்கிலும் இந்த சீரியல் நல்ல இடத்தில் இருந்து வருகிறது
.இந்த சீரியலில் சித்தி 2 சீரியலில் நடித்த நந்தன் லோகநாதன், ஹீமா பிந்து, ரூபஸ்ரீ, மீனா வேம்புரி, சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வாருகிறார்கள். இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் ஹீமா பிந்து. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியலான ‘இதயத்தை திருடாதே’ சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹீமா பிந்து. அதன் மூலம் அவருக்கு சன் டிவியின் இலக்கியா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இலக்கியா சீரியல் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், சீரியலில் இருந்து விலகுவதாக நடிகை ஹீமா பிந்து தெரிவித்துள்ளார்.
இலக்கியா சீரியலில் இருந்து ஹீமா பிந்து விலகுவதற்கான காரணத்தை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். ஹீமா பிந்து தனது பதிவில், “என்னுடைய சக நடிகர்கள், ரசிகர்கள் எனக்குக் கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் நான் என்றே நன்றி கடன் பட்டுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். கனத்த இதயத்துடன் இலக்கியா சீரியலை விட்டு விலகுவதாக முடிவு எடுத்துள்ளேன்.
என்னுடைய இந்த முடிவு உங்களுக்கு ஏமாற்றத்தை அளித்ததால் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இதனால் நீங்கள் வருத்தப்படாதீர்கள். என்னையும் மீறிய சில சூழ்நிலைகள் மற்றும் காரணங்களால் நான் இந்த சீரியலை விட்டு விலகுகிறேன்.
சினிமாவையும் சீரியலையும் பேலன்ஸ் செய்வது மிகவும் கஷ்டமானதாக இருக்கிறது. இது எனக்கு மட்டுமில்லை இலக்கியா சீரியலில் நடிக்கும் சக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும். அது தேவையில்லாத மன அழுத்தத்தையும், பிரஷரையும் ஏற்படுத்தியது. என்னால் இந்த சீரியலுக்கு தொந்தரவு வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை
.எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் சீரியல் தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய மிகப்பெரிய விருப்பம். அதனால் தான் நான் இந்த சீரியலை விட்டு விலகுகிறேன்.
இந்த வெற்றிகரமான சீரியலில் நானும் ஒரு பங்காக இருந்ததை நினைத்து சந்தோஷப்படுகிறேன். எனக்கு கொடுத்த அன்பையும் ஆதரவையும் மற்றவர்களுக்கும் கொடுங்கள். என்னுடைய இந்த முடிவுக்கு பக்கபலமாக இருந்ததற்கு நன்றி. அன்புடன் நன்றியுடன் பிந்து! என பகிர்ந்துள்ளார்.
இந்தநிலையில், இலக்கியா சீரியலில் இனி இலக்கியாவாக நடிகை ஷாம்பவி குருமூர்த்தி நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான ஷாம்பவி, இனி இலக்கியாவாக ரசிகர்களின் வரவேற்பைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.