டபுள் ஆக்ஷனில் விஜய்; வெங்கட் பிரபு இயக்கும் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஜய் 68 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகி உள்ளது.
இந்தப்படத்தில் விஜய் உடன் அஜ்மல், மைக் மோகன், ஜெயராம், பிரசாந்த், பிரபு தேவா, வைபவ், பிரேம்ஜி, லைலா, சினேகா, நிதின் சத்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. தளபதி 68 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்திலும் நடைபெற்றது, அடுத்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பை அண்மையில் ஐதரபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடத்தி முடித்தனர். தற்போது புத்தாண்டு விடுமுறைக்காக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டுக்குப் பிறகு தளபதி 68 படத்தின் படப்பிடிப்பை இலங்கையில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அதற்கான லொகேஷன் தேர்வு செய்யும் பணியில் இயக்குனர் வெங்கட் பிரபு ஈடுபட்டு உள்ளார்.
இந்த நிலையில், புத்தாண்டு ஸ்பெஷலாக இன்று தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இந்த போஸ்டரில் நடிகர் விஜய் தந்தை – மகன் என இரட்டை வேடங்களில் வருவது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இப்படத்திற்கு The Greatest Of All Time (GOAT) என பெயரிடப்பட்டு உள்ளது. மேலும் A Venkat Prabhu Hero என டேக்லைன் வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் விஜய் இரண்டு வேடங்களிலும் விமானி கெட்டப்பில் இருப்பதால் அவர் பைலட் ஆக நடித்திருப்பது போல் தெரிகிறது. மேலும் இந்த படத்திற்காக டீ ஏஜிங் முறையை பயன்படுத்தி விஜய்யை இளமையாக காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய கீதை படத்திற்கு பிறகு விஜய் உடன் யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தில் இணைந்துள்ளதால், படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.