Doctor Vikatan: அளவுக்கு அதிகமான சத்தத்தைக் கேட்டால் தலைவலி, எரிச்சல்… தீர்வு என்ன?
Doctor Vikatan: அளவுக்கு அதிகமான சத்தத்தைக் கேட்கும்போது எரிச்சலடைகிறேன். தொடர்ந்து அப்படிப்பட்ட சத்தத்தைக் கேட்கும்போது தலைவலிக்கிறது.
காரணம் என்ன… இந்தப் பிரச்னைக்குத் தீர்வு உண்டா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.
காது- மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் சென்னை
மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரண விஷயமாகத் தோன்றினாலும் சிலருக்கு இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
அதாவது, அதிக அளவிலான சத்தத்தை நீண்ட காலமாகக் கேட்பதால் பலவித உடல்நலக் குறைபாடுகள் உண்டாகும் ஆபத்து உள்ளது. காது கேட்கும் திறன் குறைவது முதல், உயர் ரத்த அழுத்தம், இதயக் கோளாறுகள், மன அழுத்தம் ஏற்படுவதுவரை இதனால் பல பிரச்னைகள் ஏற்படலாம்
அதிக அளவிலான சத்தம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதால் நம் உடலானது தலைவலி, எரிச்சல் போன்ற அறிகுறிகளை உண்டாக்கி நம்மை அந்த இடத்தில் இருந்து தள்ளிப்போக உந்துகிறது; இது ஒரு தற்காப்புச் செயல் (protective reflex) என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
உடலின் இந்த எதிர் வினையைப் புரிந்துகொண்டு அதிக அளவில் சத்தம் கேட்டால் அந்த இடத்தில் இருந்து தள்ளிப் போவதே சாலச் சிறந்தது. பணி நிமித்தமோ, வேறு முக்கியமான காரணங்களுக்காகவோ அதிக அளவில் சத்தம் இருக்கும் இடத்தில் இருக்க நேர்ந்தால், பாதுகாப்பு அணிகலன்கள் (protective gear) அணிந்துகொள்வது மிக அவசியம்
எனவே, உங்கள் விஷயத்திலும் இப்படி அதிக சத்தத்தைக் கேட்க நேரும்போது அங்கிருந்து விலகிச் செல்வதுதான் தீர்வு.