ஒரே பாடலில் ஒட்டு மொத்த சேட்டைகளையும் செய்த ஜானகி… 80களில் தெறிக்கவிட்ட பாடல்..
தமிழ்த்திரை உலகில் பிரபல பாடகி ஜானகியின் குரலுக்கு ஒரு சிறப்பு உண்டு. குழந்தை, வயதானவர், சிணுங்கல், காமம் என அத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்துவார் ஜானகி.
80களில் அடித்தட்டில் உள்ள ஒரு கிராமத்துப் பெண்ணுக்கு உரிய நிலைமையை அப்படியே அவரது உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தார் ஜானகி. பூட்டாத பூட்டுக்கள் என்ற படம். மகேந்திரன் இயக்கியுள்ளார். மலையாள நடிகர் ஜெயன் நடித்தார். முதலில் மகேந்திரன் ரஜினியிடம் தான் இந்தக் கதையைச் சொன்னாராம். அந்தக் கதை தனக்குப் பொருந்தாது என்று சொன்னதால் ஜானி படத்தில் நடிக்க வைத்தாராம் மகேந்திரன்.
இந்தப் படத்தில் வந்த ஒரு பாடல் தான் இது. ஆண்டிப்பட்டி மாரியப்பன் பொண்டாட்டி என்று தொடங்குகிறது அந்தப் பாடல். இந்தப் பாட்டுக்கு இடையிலேயே ஒப்பாரியும் வருகிறது. வசனமும் வருகிறது. பாடலை எழுதியவர் பஞ்சு அருணாச்சலம். அந்தக் காலகட்டத்தில் கிராமத்தில் இருந்த வழக்குச் சொற்களை வைத்து எழுதியுள்ளார்.
பாடலில் வெள்ளிமூக்குக் கழுதை, ஓட்டக்காலு, நொள்ளக்கண்ணு என கிண்டலுக்கு அளவே இல்லை. இளையராஜா நாட்டுப்புற இசையுடன் அதில் தன்னோட வித்தையையும் கலந்து இருந்தார். பாடலுக்கு இடையில் கங்கை அமரனும் வசனம் பேசுகிறார்.
மேற்கண்ட தகவலை ஆலங்குடி வெள்ளைச்சாமி காணொளி ஒன்றில்தெரிவித்துள்ளார்.