எம்ஜிஆர் கொடுத்த பணத்தை வாங்க மறுத்த வி.எஸ்.ராகவன்… ஏன்னு தெரியுமா?
பொதுவாக எம்ஜிஆர் படங்களில் நடிகர், நடிகையரை தேர்வு செய்யும் பொறுப்பைத் தயாரிப்பாளர் அவரிடமே விட்டு விடுவார்களாம். அவரது படங்களில் முக்கியமாக இடம்பெறுபவர் வி.எஸ்.ராகவன். எம்ஜிஆரின் 100வது படத்தில் தான் அவருக்கு எம்ஜிஆருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
எங்கள் தங்கம், உரிமைக்குரல், சங்கே முழங்கு உள்பட எம்ஜிஆரின் கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை பல படங்களில் வி.எஸ்.ராகவன் நடித்தார். டெக்னீஷியன்கள், துணை நடிகர்களும் எம்ஜிஆர் படம்னா நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். காரணம் மற்ற படங்களை விட இங்கு கூடுதல் சம்பளம். இதற்கும் மேலாக எம்ஜிஆரே எல்லோருக்கும் சம்பளம் பேசியபடி வந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வாராம்.
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் நடித்த விஎஸ்.ராகவனுக்கு சம்பளம் முதலில் ஒரு தொகை பேசப்பட்டதாம். அதன்பிறகு சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளும்படி தயாரிப்பு தரப்பில் இருந்து கூறினார்களாம். இது அவருக்கு தர்மசங்கடத்தை உண்டாக்கியதாம். உடனே கவிஞர் வாலியிடம் தன் நிலைமையைக் கூற, அவரும் ஒரு யோசனை கூறினாராம்.
அதே போல, வி.எஸ்.ராகவனும் தயாரிப்பு தரப்பில் இப்படி பேசினாராம். என் சம்பளம் எம்ஜிஆரின் ஒப்புதலோடு பேசி முடிவு செய்யப்பட்டது. அவர் நான் குறைவாக வாங்கிக் கொண்டால் வருத்தப்படுவார். அவருக்கு நான் என்ன பதில் சொல்வது என்று கேட்டாராம். மறுபேச்சில்லாமல் ஏற்கனவே அவருக்குப் பேசிய சம்பளம் கிடைத்ததாம்.
ராகவனின் தாயார் உடல்நலம் குன்றியதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது தான் இயல், இசை, நாடகத்திற்கு எம்ஜிஆர் அவரைக் கௌரவ செயலாளராக நியமித்தார். அந்த சமயத்தில் எம்ஜிஆரின் உதவியாளர் ஒருநாள் திடீரென ராகவனின் வீட்டுக்கு வந்தார். ஒரு பெரும் தொகையைக் கொடுத்து எம்ஜிஆர் உங்கள் தயாரைக் கவனித்துக் கொள்வதற்காகத் தந்து அனுப்பினார் என்றார்.
அதற்கு நன்றி தெரிவித்த ராகவன், இந்தப் பணத்திற்கு இப்போது அவசியமில்லை என்று திருப்பிக் கொடுத்து அனுப்பினார். இது எம்ஜிஆருக்கு வருத்தம் தந்தது. அதன்பின் ஒரு நாள் ராகவன் எம்ஜிஆரிடம் இப்படி சொன்னார். உங்களுக்குத் தெரியாதது இல்லை. என் தாயார் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி விட்டார்.
அந்த சமயத்தில் நீங்கள் மருத்துவ செலவுக்கு என்று பெரிய தொகையக் கொடுத்து அனுப்பினீர்கள். அப்போது அது தேவைப்படவில்லை. நான் வாங்குவதும் முறையாக இருக்காது. அதனால் தான் திருப்பி அனுப்பினேன் என்றார். அவரது விளக்கத்தைப் பொறுமையாகக் கேட்ட எம்ஜிஆர் அவரை மனதாரப் பாராட்டினாராம்.