Health Department : 2024ம் ஆண்டில் தமிழக சுகாதாரத்துறைக்கு உள்ள சவால்கள் என்ன? – ஓர் அலசல்!

Health Department : 2024ம் ஆண்டில் தமிழக சுகாதாரத்துறைக்கு உள்ள சவால்கள் என்ன? – ஓர் அலசல்!
இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழக சுகாதாரத்துறை சிறந்து விளங்குகிறது என்றாலும் சில குறைப்பாடுகள் உள்ளன. அதை 2024ம் ஆண்டு களைய தமிழக அரசு முன்வர வேண்டும்.
சுகாதாரம், அடிப்படை உரிமைச் சட்டம் (Right to health care Act) தமிழகத்தில் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டாலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. சமூகநீதி பேசும் தமிழக அரசு அதை விரைவில் நடைமுறைப்படுத்தவேண்டும்.
முதியோர் ஓய்வூதியத் திட்டத்திலும், மற்ற மாநிலங்களை விட தமிழகம் பின்தங்கியுள்ளது.
இன்று தமிழகத்தில் 831 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 28 பேருக்கு பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு தற்போது வரை உருமாற்றம் பெற்ற கொரோனா (JN.1) 4 பேருக்கு மட்டுமே இருப்பதாக கூறுகிறது. ஆனால் பத்திரிக்கை செய்தியோ தமிழகத்தில் 45 பேருக்கும், சென்னையில் அதிகபட்சமாக 25 பேருக்கும் JN.1 பாதிப்பு இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் அதிர்ச்சி என்னவெனில் தமிழக அரசால் ஒரு JN.1 பாதிக்கப்பட்ட நபரைக்கூட கண்டறிய முடியவில்லை. தமிழகத்தில் கொரோனா மூலக்கூறு ஆய்வகம் இருந்தும், இதுவரை ஒருவருக்குக்கூட தமிழக அரசால் உருமாற்றம் பெற்ற கொரோனா பாதிப்பை கண்டறிய முடியவில்லை.
தமிழக அரசு, நோயாளிகள் தன் சொந்த செலவில் சுகாதாரத்தை பேணிகாக்க சிகிச்சை பெறுவதை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மருத்துவமனை தவிர்த்து, மருந்தின் தரத்தையும் தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்.
மருத்துவத்துறையில் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். நிரந்தர பணியாளர்களை நியமித்து ஒப்பந்த பணிமுறையை நீக்க வேண்டும்.
மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை கிராமம் மற்றும் நகர்புறத்தில் மேம்படுத்த வேண்டும். கிராம மற்றும் நகர்ப்புறங்களில் அரசு மருத்துவமனைகளில் டெங்கு மற்றும் ஃப்ளூ பாதிப்புகைளைக் கண்டறியும் பரிசோனை வசதிகளை உடனே ஏற்படுத்தி நோய்களை ஆரம்பத்தில் கண்டறிந்து உரிய சிகிச்சை இலவசமாக அளிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
தொற்றா நோய்களின் பாதிப்பை குறைக்க உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
சிறுதானியங்களை பொதுவிநியோகத் திட்டத்தில் மக்களுக்கு வழங்க வேண்டும்.
நோய்களுக்கு அடிப்படை காரணிகளாக அமையும் நிலம், நீர், காற்று மாசுபடுதலை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஊட்டச்சத்து குறைப்பாடு, ரத்த சோகை, அதிக எடை (Obesity) பாதிப்பு போன்றவற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மக்களின் பங்களிப்போடு சுகாதாரத் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.
2024ம் ஆண்டிலாவது மேற்சொன்ன விசயங்களை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசு முன்வந்தால் சிறப்பாக இருக்கும் என்று மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.