|

சில நாட்களில் தலைகீழ் மாற்றம்.. திடீரென இந்தியாவில் கொரோனா அதிகரிப்பது ஏன்! வேக்சின் நம்மை காக்குமா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களும் பொது இடங்களில் மாஸ்க் அணிவதைக் கட்டாயமாக்குவது தொடர்பாகவும் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா மீண்டும் அதிகரித்துள்ளது பலருக்கும் அச்சத்தையே கொடுக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மொத்தம் 358 கேஸ்கள் பதிவாகியுள்ளன, கேரளாவில் இருந்து மட்டும் 300 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதேபோல ஆறு பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு: மேலும், தற்போது 2,669 பேர் கொரோனாவால் சிகிச்சை பெற்றும் வருகிறார்கள். பல மாதங்களுக்குப் பிறகு கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஜேஎன் 1 என்ற புது வகை கொரோனா காரணமாக இப்போது வைரஸ் பாதிப்பு அதிகரிக்கிறது. எங்கு இந்த புது வேரியண்ட் அடுத்த ஒரு புதிய அலையை ஏற்படுத்துமோ என்பதே அனைவரது அச்சமாக இருக்கிறது.

உலக சுகாதார அமைப்பும் கூட இந்த ஜேஎன் 1 வகை கொரோனாவை கண்காணிக்க வேண்டிய கொரோனாவாக பட்டியலிட்டு இருக்கிறது. அதேநேரம் தற்போது உள்ள சூழலை வைத்துப் பார்க்கும் போது இது ஆபத்தான கொரோனா வகையாகத் தெரியவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குளிர் காலம் என்பதால் இப்போது கொரோனா தொடங்கி அனைத்து வகையான சுவாச நோய்த்தொற்றுகளும் அதிகரிக்கவே செய்யும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

வேக்சின்: இது குறித்து இந்தியத் தேசிய மருத்துவ சங்கத்தின் கோவிட் பணிக்குழு இணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கூறுகையில், “கடந்த காலங்களில் கொரோனா அலை ஏற்பட்ட போது வேக்சின்கள் தான் நம்மை காப்பாற்றி இருக்கிறது. ஆனால் இந்த வேரியண்ட் அதில் இருந்து தப்புமோ என்ற அச்சம் நமக்கு எழுந்துள்ளது.

ஏனென்றால் இப்போது பரவும் ஜேஎன் 1 வகை ஏதோ ஒரு விஷயத்தில் மட்டும் முன்னால் இருக்கவில்லை. அது பல விஷயங்களில் முன்னோக்கி இருக்கிறது. இந்த மரபியல் மாற்றத்தை சால்டேஷன் நிகழ்வு என்று அழைக்கிறோம். அதாவது ஒரே நேரத்தில் பல பிறழ்வுகள் ஏற்படுவதையே இது குறிக்கிறது.

மாஸ்க்: காற்றோட்டம் இல்லாத, அதிக கூட்டமான இடங்களில் நீங்கள் சிக்கிக் கொண்டால் மாஸ்க் அணிய வேண்டியது கட்டாயம். மாஸ்க் தான் உங்களைப் பாதுகாக்கும். வெளியே செல்லும் உங்களை நீங்கள் பாதுகாக்க மாஸ்க் அணிய வேண்டும். மாஸ்க் மற்றும் வேக்சின்கள் தான் உங்களைப் பாதுகாக்கும்” என்று அவர் தெரிவித்தார். வேகமாகப் பரவும் கொரோனா குறித்து மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தலும் வழங்கப்பட்டு இருந்தது.

அமைச்சர் சொல்வது என்ன: இதற்கிடையே இது தொடர்பாகச் சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், “கொரோனா வைரஸின் புதிய வேரியண்ட் குறித்து நாம் எச்சரிக்கையாகவும் தயாராகவும் இருப்பது முக்கியம். அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் பிற பொருட்களை போதுமான அளவு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *