‘என்ன பழக்கம்னா இது’- ரத்தினவேலுடன் இணையும் மாமன்னன்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட மாமன்னனும், ரத்தினவேலும் மீண்டும் ஒரு திரைப்படத்தில் ஒன்றிணைகின்றனர். இது ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்த அரசியல் படம் மாமன்னன். இந்த படத்தில் வடிவேலு மாமன்னன் ஆகவும், மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் வில்லன் கதாபாத்திரத்தையும் தாங்கி நடித்திருந்தனர்.

படத்தில் வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசிலின் கேரக்டர்கள் பெரிதும் பேசப்பட்டன. இந்த நிலையில் சுதீப் சங்கர் இயக்கத்தில் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் புத்தாண்டு தினத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் சூப்பர் குட் பிலிம்ஸ் இன் 98-வது படமான ஆர்.பி சௌத்ரி தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் வடிவேலும், ஃபகத் ஃபாசிலும் இணைந்து நடிக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்கிறார்; எடிட்டிங் பணிகளை ஸ்ரீஜித் சாரங் கவனிக்கிறார். தமிழில் இது ஃபகத் ஃபாசிலுக்கு ஆறாவது படமாகும்.

ஃபகத் ஃபாசில் தமிழில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான வேலைக்காரன் (2017) என்ற படத்தில் அறிமுகம் ஆகி இருந்தார். அதன்பின்னர் 2019-ல் சூப்பர் டீலக்ஸ், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் (2022) படத்தில் நடித்திருந்தார்.

தற்போது ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் உள்ளன.

வடிவேலு மாமன்னன் திரைப்படத்தை தொடர்ந்து சந்திரமுகி பாகம் இரண்டில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *