ஓவர் ஆக்டிங் பண்றார்… விமர்சித்த உதவி இயக்குனர் : சிவாஜி கொடுத்த ரியாக்ஷன்
எம்.பாஸ்கர் இயக்குனராக ஆவதற்கு முன்பு க்ளாசிக் சினிமாவின் முன்னணி இயக்குராக இருந்த ஸ்ரீதரிடம் பாஸ்கர் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கனம் என்றால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று சொல்வார்கள். நாயகனாக அறிமுகமானது முதல் பல படங்களில் நடித்துள்ள சிவாஜி, ஓவர் ஆக்டிங் என்று பலமுறை விமர்சனங்களையும் எதிர்கொண்டுள்ளார். அப்படி ஒருமுறை உதவி இயக்குனர் ஒருவர் விமர்சனம் செய்ததை, சிவாஜி ஏற்றுக்கொண்டு சென்த செயல் பலரும் அறியாத ஒரு தகவல்.
2-வது நாயகனாக நடித்துக்கொண்டிருந்த ரஜினிகாந்தை நாயகனாக அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குனர் எம்.பாஸ்கர். 1975-ம் ஆண்டு வெளியான இன்னும் ஒரு மீரா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், அடுத்து 1978-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பைரவி படத்தை இயக்கியிருந்தார். அதன்பிறகு தப்பு தாளங்கள் என்ற படத்தை இயக்கியிருந்தார்.
இயக்குனராக ஆவதற்கு முன்பு க்ளாசிக் சினிமாவின் முன்னணி இயக்குராக இருந்த ஸ்ரீதரிடம் பாஸ்கர் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அப்போது ஒருநாள் சிவாஜி நடிப்பில், ஸ்ரீதர் இயக்கிய படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் சிவாஜி நடித்த காட்சி படமாக்கி முடிக்கப்பட்டது. இந்த காட்சியை பார்த்த உதவி இயக்குரான பாஸ்கர், தனது சக உதவி இயக்குனர்களிடம், சிவாஜி இந்த காட்சியில் ஓவர் ஆக்டிங். கொஞ்சம் குறைத்து நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.
பாஸ்கர் சொன்ன இந்த விஷயம் சிவாஜிக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. உதவி இயக்குனர்கள் பேசிக்கொண்டிருக்கும் இடத்திற்கு வந்த சிவாஜி, என்ன பேசிட்டு இருக்கீங்க என்று கேட்க, அவர்கள் ஒன்றும் இல்லை என்று மழுப்பலாக பதில் கூறியுள்ளனர். ஆனாலும் சிவாஜி ஒன்னும் இல்லை தைரியமா சொல்லுங்க என்று சொல்ல, இந்த காட்சியில் உங்கள் நடிப்பு ஓவராக இருக்கிறது என்று பாஸ்கர் கூறியதாக தெரிவித்துள்ளனர்.
இதை கேட்க, சிவாஜி, அவன் சொல்வது சரிதான். நடிக்கும்போது எனக்கும் அப்படித்தான் பட்டது என்று சொல்லிவிட்டு, இயக்குனர் ஸ்ரீதரிடம் சென்று, இந்த காட்சியை மீண்டும் படமாக்கலாம் என்று கூறியுள்ளார். சிவாஜியின் பேச்சை கேட்ட, ஸ்ரீதர் உடனடியாக அந்த காட்சியை மீண்டும் படமாக்கியுள்ளார். உதவி இயக்குனராக இருந்தபோது ஒரு காட்சிக்கு நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று சிவாஜியின் கணிப்புகளை சரியாக கணித்தவர் தான் இயக்குனர் எம்.பாஸ்கர்.