நான்லாம் உலக நாயகன் இல்ல!.. அவங்கதான்!.. கமல்ஹாசன் பட்டியலிட்ட திரை பிரபலங்கள்!..
Kamalhaasan: 5 வயது முதல் சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். முதல் படமே ஏவிஎம் தயாரிப்பில் ஜெமினி கணேசன் – சாவித்ரியின் மகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் அளவுக்கு அதிர்ஷ்டசாலியாக இருந்தார். சினிமாவில் அதிர்ஷடம் என்பது எல்லோருக்கும் சரியாக அமையாது. அது கமலுலுக்கு அமைந்தது. இதை அவரே பல மேடைகளில் சொல்லி இருக்கிறார்.
என்னை சுற்றி அனுபவம் வாய்ந்தவர்களும், திறமைசாலிகளும் இருந்தனர். சிவாஜி ஐயா, ஜெமினி கணேசன் ஐயா, சாவித்ரி, நாகேஷ் போன்ற நடிகர்களின் மடியில் அமர்ந்து விளையாடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. திறமையான இயக்குனர்கள் என் நட்பு வட்டாரத்தில் இருந்தனர். பாலச்சந்தர் என்னை வளர்த்தெடுத்தார். இவர்களால்தான் நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன் என அவர் பேசியிருக்கிறார்.
அதேநேரம், கமல் தனது தனித்தன்மையால் மற்ற நடிகர்களிடமிருந்து வேறுபட்டிருந்தார். 4 பாட்டு, 3 சண்டை, செண்டிமெண்ட், காமெடி என வெற்றிக்கு தேவையான விஷயங்கள் மட்டுமே இருக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடிக்கவேண்டும் என்பதை ரஜினி உள்ளிட்ட பல நடிகர்கள் பின்பற்றியபோது நல்ல கதைகள், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம், ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம் என வேறு மாதிரி யோசித்தவர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்த வேண்டும் என்கிற தாகம் அவருக்கு நிரந்தரமாக இருக்கிறது.
அதனால்தான் பேசும் படம், ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், மகாநதி, குருதிப்புனல், குணா, விருமாண்டி, விஸ்வரூபம், தசாவதாரம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களுக்கு கிடைத்தது. அதனால்தான் ரசிகர்கள் அவரை உலக நாயகன் என்றும் அழைத்தனர். ஆனால், தன்னை அவர் அப்படி நினைப்பது இல்லை என்பது பலருக்கும் தெரியாது.
இதுபற்றி அவருடன் நடித்த நடிகர் இளவரசு சொல்லிய போது ‘பாபநாசம் படத்தில் நடித்தபோது, கமல் அப்படியே நடந்து கொண்டிருந்தார். திடீரென ‘என்ன உலகநாயகன்?.. வைகை அணைல தண்ணி பாய்ச்சிக்கிட்டு இருந்துட்டு, திடீர்னு ஆர்மோனியத்தை வாசிச்சி இசையை அதுல அடக்குனான் பாருங்க(இளையரஜா).. அவன்தான் உலகநாயகன்.. எங்கையோ தேனில மலேரியாவுக்கு ஊசி போடுற ஒருத்தன் சென்னை வந்து பெரிய டைரக்டரா மாறி சினிமாவையே மாத்துனான் பாருங்க(பாரதிராஜா).. அவன்தான் உலகநாயகன்..
எங்கயோ பெங்களூர்ல பஸ் கண்டக்டரா இருந்த ஒருத்தன் சென்னை வந்து சினிமாவுல நடிச்சி சூப்பர்ஸ்டாரா மாறினான் பாருங்க.. அவன்தான் உலகநாயகன். இதெல்லாம்தான் சாதனை. என்னை உலக நாயகன்னு சொல்றாங்க.. ஆனா நான் சினிமாவுல ஜெயிச்சது பெரிய விஷயமே இல்ல’ என சொன்னார். கமல் தன்னை இப்படித்தான் புரிந்து வைத்திருக்கிறார்’ என இளவரசு சொல்லியிருந்தார்.