ஃபகத் பாசிலுடன் மீண்டும் இணையும் வடிவேலு!.. சூப்பர் குட் பிலிம்ஸின் தெறி அப்டேட்!..
Fahadh paasil: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மலையாள நடிகர் ஃபகத் பாசில், வடிவேலு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் மாமன்னன். இந்த படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. வழக்கம்போல் இந்த படத்திலும் மாரி செல்வராஜ் சாதிய பிரச்சனையை கையாண்டிருந்தார்.
தாழ்த்தப்பட்ட சாதியினர் அரசியலில் ஒரு நல்ல பதவியில் இருந்தாலும் அதே கட்சியில் அவருக்கு மேலே இருக்கும் நபர்கள் அவரை அப்படி நடத்துகின்றனர் என்பதை தோலுரித்து காட்டியிருந்தார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் இப்படத்திற்கு பெரிய பலமாக இருந்தது.
குறிப்பாக வடிவேலுவை இதுவரை காமெடி காட்சிகளில் மட்டுமே பார்த்த ரசிகர்கள் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் அப்பாவாக, சாதிய அடக்குமுறைகளுக்கு அடங்கிப்போகும் மனிதராக அவர் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பை பார்த்து அசந்துபோனார்கள். இப்படம் மூலம் தான் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதையும் காட்டியிருந்தார்.
இப்படத்தில் சாதிவெறி பிடித்த வில்லனாக ஃபஹத்பாசில் நடித்திருந்தாலும் தமிழகத்தில் இருக்கும் பல சாதி வெறியர்களின் ஹீரோவாக மாறினார். இதைத்தொடர்ந்து சாதிவெறிபிடித்த பலரும் அவரை தங்களின் ஹீரோவாக கொண்டாடினர். இது எந்த நோக்கத்தில் அந்த படத்தை மாரி செல்வராஜ் எடுத்தாரோ அந்த நோக்கமே சிதைந்து போனது.
இந்நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய படத்தில் பஹத் பாசிலும் வடிவேலுவும் ஒன்றாக இணைந்து நடிக்கவுள்ளனர். தமிழ் திரையுலகில் பல புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. இது இந்நிறுவனத்தின் 98வது திரைப்படமாகும். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார்.
இப்படத்தை வி கிருஷ்ண மூர்த்தி என்பவர் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மாமன்னன் படத்திற்கு பின் ஃபஹத் பாசிலும், வடிவேலுவும் மீண்டும் இணைந்து நடிக்கவிருப்பது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.