இனிக்க இனிக்க வரப்போகும் சேதி.. இவர் அங்கே வர்றாராமே.. அடித்தாடும் திமுக.. கவனித்த பாஜக.. அப்ப பாமக?
தமிழக அரசியல் களம் பரபரப்பாகி வரும்நிலையில், திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்.. இது தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.
பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்தபிறகு யாருமே இன்னும் கூட்டணி வைக்கவில்லை. பாஜக தனித்து போட்டியிடுமா? என்றும் உறுதியாகவில்லை.. இப்படிப்பட்ட சூழலில், பாமக யாருடன் கூட்டணி வைக்க போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.
பேச்சுவார்த்தை: அதிமுக-பாமக தரப்பில் சீக்ரெட்டான பேச்சுவார்த்தை ஏற்கனவே நடத்தப்பட்டதாகவும், 9 + 1 என்ற ரீதியில் பாமக சீட் பேரம் நடத்தியதாகவும், அதிமுக இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரம், பிற சமுதாயத்தினரின் ஓட்டுகளை வரவிடாமல் பாமக தடுத்து விடும் என்று அதிமுக மேலிடம் நினைப்பதால், பாமகவுடன் கூட்டணி வைப்பது சந்தேகம்தான் என்றார்கள்.
ஆனால், பூவை ஜெகனின் புரட்சி பாரதம், தமீமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி, ஜான் பாண்டியன் போன்றோர் மட்டுமே அதிமுகவுக்கு ஆதரவு தர முன்வந்துள்ளனரே தவிர, பெரிய கட்சி யாருமே இதுவரை அதிமுகவுடன் கூட்டணியை அறிவிக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது. அந்தவகையில், பாமக இல்லாத அதிமுக கூட்டணி சோபிக்குமா? என்ற சந்தேகமும் எழும்பியுள்ளது.
திமுகவுடன் கூட்டணி வைக்க பாமக முயன்றுவருவதாக சொல்கிறார்கள். அதற்கேற்றவாறு, 4 நாட்களுக்கு முன்பு, தமிழக முதல்வர் ஸ்டாலினை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்தித்து பேசியிருக்கிறார்..
வன்னியர்கள்: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும், வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீட்டு சட்டமசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்ட சந்திப்பு இதுவென்றாலும், கூட்டணி விவகாரமும் கசிந்து வருகிறது.
அதுமட்டுமல்ல, டாக்டர் ராமதாசுடன் துரைமுருகனும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தொடர்பில் இருந்து வருகிறார்களாம்.. காரணம், திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும் என இவர்கள் விரும்புகிறார்களாம்.. இதனை ஸ்டாலினிடம் துரைமுருகன் ஏற்கனவே விவரித்திருப்பதால், இதுவரை எந்த முடிவையும் திமுக எடுக்கவில்லையாம்.
எம்பி தேர்தல்: திமுக கூட்டணியை பொறுத்தவரை, ஏற்கனவே உள்ள அதே கட்சிகள்தான் வரும் எம்பி தேர்தலிலும் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. திமுகவில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதிகள் என்பது ஓரளவு முடிவு செய்துவிட்டார்களாம்.. கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் வேண்டுமானால் மாறலாமே தவிர, எண்ணிக்கை மாற வாய்ப்பு இல்லை என்கிறர்கள்.
இதில், கடந்த முறை, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ஐஜேகே பாரிவேந்தர் மட்டும், பாஜகவுடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ளதால், அவருக்கு பதிலாக, கமல்ஹாசனை உள்ளே கொண்டுவந்து, மக்கள் நீதி மய்யத்துக்கு 1 சீட் ஒதுக்க திமுக கணக்கு போடுவதாக தெரிகிறது.
சீட்டுக்கள்: ஆனால், திமுகவுடன் பாமக கூட்டணி வைக்க நேர்ந்தால், எப்படியும் 5, 6 சீட்டுக்களையாவது தர வேண்டியிருக்கும். ஆனால், அவர்களுக்கு தொகுதி ஒதுக்கும் அளவுக்கு திமுக தரப்பில் சீட் இல்லையாம்.. அப்படியே பாமகவை கூட்டணியில் சேர்ப்பதாக இருந்தாலும் விசிக அதனை ஏற்குமா? என்பதும் கேள்விக்குறிதான்.
அதேசமயம், விசிகவை இழக்க திமுகவுக்கும் விருப்பமில்லை என்பதால், கூட்டணி வைப்பது சந்தேகம்தான் என்கிறார்கள். அதனால், பாஜகவுடனான கூட்டணியை பாமக மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், அதிமுக இல்லாத கூட்டணியில் இடம்பெற்றால், வெற்றி வாய்ப்பு சாத்தியமா? என்ற சந்தேகமும் பாமகவுக்கு இருக்கிறதாம்.
பாஜக கூட்டணி: ஏற்கனவே, பாஜகவுடன் பாமக கூட்டணி வைக்க முயல்வதாக ஒரு செய்தி வட்டமடித்தது.. ஆனால், ஒதுக்கப்படும் 13 தொகுதிகளில், சிதம்பரம், கடலூர், தர்மபுரியில் கண்டிப்பாக பாமக வெற்றிபெற்றால்தான் மத்திய அமைச்சர் போஸ்டிங் தரப்படும் என்ற கண்டிஷனை பாஜக போட்டதாம்.
அதனால்தான், பாஜகவுடன் கூட்டணி வைக்க, பாமக தயங்கியதாம்.. இப்படியெல்லாம் பல்வேறு யூகங்கள் வெளிவந்தபடியே இருந்தாலும், இதுவரை பாமக தரப்பில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை.. பொறுத்திருந்து பார்ப்போம்…!!