‘ராம பக்தர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ்’ உத்தவ் புகாருக்கு தலைமை பூசாரி பதில்
அயோத்தி, ‘அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் வரவில்லை’ என தெரிவித்த, மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, ”கடவுள் ராமரின் பக்தர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது,” என, ராமர் கோவிலின் தலைமை பூசாரியாக நியமிக்கப்பட்டு உள்ளஆச்சார்யா சத்யேந்திர தாஸ் விளக்கம் அளித்து உள்ளார்.உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள அயோத்தி மாநகரில், கடவுள் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா, 22ம் தேதி நடக்கஉள்ளது. குற்றச்சாட்டுஇதை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு, கோவில் அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது. அதேசமயம், ‘கோவில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை’ என, ஒரு சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே, ‘ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை’ என, சமீபத்தில் புகார் தெரிவித்திருந்தார்.
அவரது கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் ராவத்தும், ‘வரும் லோக்சபா தேர்தலின் போது, கடவுள் ராமரின் பெயரில் பா.ஜ.,வினர் ஓட்டு கேட்பர். கோவிலை கட்டியதை தவிர, அவர்கள் வேறு எதுவுமே செய்யவில்லை’ என, விமர்சித்திருந்தார். அரசியல் அல்லஇந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ராமர் கோவிலின் தலைமை பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் நேற்று கூறியதாவது:கடவுள் ராமரின் பக்தர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது. ராமர் பெயரில், பா.ஜ., அரசியல் செய்கிறது என்று சொல்வது முற்றிலும் தவறு.
நம் நாடு உட்பட உலகம் முழுதும், பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிக மரியாதை அளிக்கப்படுகிறது. அவர் மகத்தான செயல்களை செய்துள்ளார். ராமர் கோவில் விவகாரம் அரசியல் அல்ல; இது, பிரதமர் மோடியின் பக்தியை காட்டுகிறது.கடவுள் ராமரை நம்பி, தேர்தலை சந்தித்தவர்கள் தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். இதில், சஞ்சய் ராவத்துக்கு என்ன பிரச்னை? அவர் ஏன் முட்டாள்தனமாக பேசி வருகிறார்? கடவுள் ராமரை அவமதிக்கும் வகையில் சஞ்சய் ராவத் நடந்து கொள்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.