அடே நண்பா! உன்னை வெல்வேன்.. வெற்றி நிச்சயம்.. வெறித்தனமாக பயிற்சி செய்யும் ஹர்திக்..ட்ரோலுக்கு பதலடி
மும்பை : ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் அதற்கு முன்பே அதைப்பற்றி ரசிகர்கள் பேசி வருகிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் மும்பை இந்தியன்ஸ் அணி செய்த வேலைதான்.
கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு குஜராத் அணியிலிருந்து வாங்கி ஹர்திக் பாண்டியாவை மும்பை அணியின் கேப்டனாக மாற்றியது. இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் கடுப்பாகினர். ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கினால் தாங்கள் ஐபிஎல் தொடரை புறக்கணிப்போம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் ஹர்திக் பாண்டியாவை கடுமையாக ட்ரோல் செய்த ரோகித் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவை நல்ல பாம்புடன் ஒப்பிட்டு அவரை வேதனைப்படுத்தினர். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2015 முதல் 21 ஆம் ஆண்டு வரை 92 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ஹர்திக் பாண்டியா 1476 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 27 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 153 என்ற அளவில் இருக்கிறது.
நான்கு முறை அரை சதமும் அதிகபட்சமாக 91 ரன்களும் எடுத்திருக்கிறார். இது மட்டுமில்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 42 முக்கிய விக்கெட்களை அவர் வீழ்த்தி இருக்கிறார். இவர் மும்பை அணிக்காக விளையாடிய காலகட்டத்தில் நான்கு முறை மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதேபோன்று குஜராத் அணிக்காக 31 போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்திக் பாண்டியா 833 ரன்களும், 11 விக்கெட்டு களையும் வீழ்த்தியுள்ளார்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக திரும்பி இருக்கிறார். ஹர்திக்கின் வருகையின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் அதிகரித்திருக்கிறது. ஆனால் ஹர்திக்கை கேப்டனாக ரோகித் சர்மா ரசிகர்கள் ஏற்கவில்லை. இந்த நிலையில் தான் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்திருப்பதாகவும் அவர் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்றும் செய்திகள் வெளியானது.