ரஷ்ய அதிபர் தேர்தல்: புடினுக்கு எதிராக பெண் ஊடகவியலாளர் வேட்புமனு
ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக பெண் ஊடகவியலாளர் எகாத்ரினா தன்சோவா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.ரஷ்யாவில் கடந்த 1999ம் ஆண்டு டிசம்பரில் அதிபராக இருந்த போரிஸ் யெல்ட்சின் பதவி விலகவே, தற்காலிக அதிபராக புடின் பதவி ஏற்றார்.
இதையடுத்து 2000ம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக புடின் பொறுப்பேற்றார். தற்போது அதிபராக உள்ள புடினின் பதவி காலம் 2024ம் ஆண்டு மே மாதம் நிறைவடைகிறது. அதிபர் தேர்தல் 2024ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 முறை அதிபராக இருக்கும் புடின் மீண்டும் போட்டியிடவும், 2036ம் ஆண்டு வரை அவர் அதிபர் பதவியில் நீடிக்க வழி செய்யும் வகையில் இன்னும் 2 முறை புடின் அதிபர் தேர்தலில் போட்டியிட சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.
இதையடுத்து அதிபர் தேர்தலில் போட்டியிட புடின் மனுத்தாக்கல் செய்தார். இதற்கான ஆவணங்களை புடின் சார்பில் ரஷ்ய தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்கப்பட்டது.இந்நிலையில், ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட பெண் ஊடகவியலாளர் எகாத்ரினா தன்சோவா என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். யாருக்கு அதிபர் பதவி கிடைக்கும் என்பது தேர்தல் முடிவுகளுக்கு பின் தெரிய வரும். அதேநேரத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள பெண் ஊடகவியலாளருக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.