IPL 2024 : பாண்டியா கேப்டனா வந்தது பிடிக்கலை.. பும்ரா, சூர்யகுமாருக்கு செக் வைத்த மும்பை இந்தியன்ஸ்
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்ட போது, அதை விரும்பவில்லை என பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் மறைமுகமாக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர்
அப்போது அவர்கள் இருவரும் வேறு ஐபிஎல் அணிக்கு மாறக் கூடும் என்ற பேச்சு அடிபட்டது. இந்த சீசனிலேயே கூட டிரேடிங் முறை மூலம் வேறு ஐபிஎல் அணிக்கு தாவலாம் என கூறப்பட்டது.
ஆனாலும், ஐபிஎல் மினி ஏலம் முடிந்து இரு வாரங்கள் ஆகியும் இதுவரை அவர்கள் அணி மாறுவது குறித்து எந்த தகவலும் இல்லை. இனி அவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே தொடர்வார்கள் என கூறப்படுகிறது. விருப்பம் இல்லாத போதும் பும்ரா, சூர்யகுமார் யாதவ் மும்பை அணியிலேயே தொடர என்ன காரணம் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது பத்து ஐபிஎல் அணிகள் உள்ளன. இந்த பத்து அணிகளிலேயே வீரர்களுக்கு அதிக வசதிகளை செய்து கொடுக்கும் அணி மும்பை இந்தியன்ஸ் தான். உலகின் முதல் பத்து பணக்காரர்கள் வரிசையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான அம்பானி குடும்பம் உள்ளது. அதன் காரணமாகவே மும்பை அணி வீரர்களுக்கு இயல்பாகவே பல வசதிகள் கிடைகின்றன.
அதில் முக்கியமானவை, மும்பையில் அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான உயர்தரமான பல்நோக்கு மருத்துவமனையில் எப்போதும் வேண்டுமானாலும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். அதே போல மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் பயிற்சி செய்ய சிறப்பு கிரிக்கெட் பயிற்சி மையம் ஒன்றும் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒரு சர்வதேச அணியில் இருக்கும் வசதிகளை விட கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. எனவே, மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களை மேம்படுத்திக் கொள்ள அந்த மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.