இயர் எண்டர் 2023: அரசியல் தலைவர்களுக்கு கெண்டாதி கெண்டம்.. முன்பே கணித்த பஞ்சாங்கம்
சென்னை: சோபகிருது வருடத்தில் மூத்த அரசியல் தலைவர்களுக்கு கெண்டாதி கெண்டம் ஏற்படும் என்று தமிழ் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களுக்கு முன்பே கணித்து எழுதப்பட்ட பல சம்பவங்கள் 2023ஆம் ஆண்டில் நடந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகவே பஞ்சாங்கம் என்பது நவ கிரகங்களின் பயணத்தை வைத்து முன்னோர்களால் கணித்து எழுதப்படுகிறது. அதில் சில விசயங்கள் சொன்னது போலவே நடந்து விடும். அப்படி பல சம்பவங்கள் பஞ்சாங்கத்தில் கணித்தது போலவே 2023ஆம் ஆண்டில் நடந்துள்ளன.
சோபகிருது வருட பஞ்சாங்கத்தில் நல்ல மழை பொழியும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் அதிக அளவில் மழை பெய்து வீணாக கடலில் கலக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மாநில தலைநகர், மாவட்ட தலைநகரங்களில் அதிக மழை காரணமாக பல அடுக்குமாடி குடியிருப்புகளில் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் மழை நீரால் சூழப்படும் என்று கூறப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் முதல்வாரத்தில் பெய்த மழையால் சென்னையில் பல குடியிருப்புகள் மூழ்கியது மட்டுமல்லாது வாகனங்களும் மூழ்கின வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
ஏழை எளிய மக்களுக்கு வழக்குகளில் நீதி கிடைக்கும். பாலியல் தொல்லை செய்பவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும். பெண்களுக்கு பல நல்ல சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே போலவே தற்போது நமது நாட்டில் தண்டனை சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களின் தண்டனைகளை கடுமையாக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை வழங்க புதிய சட்டங்கள் வகை செய்கின்றன.
இதேபோல் பயங்கரவாதம், வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான வழக்குகளில் தண்டனை நிரூபிக்கப்பட்டால் ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கும் வகையில் புதிய மசோதாவில் அம்சங்கள் இடம்பிடித்துள்ளன.