Senthil Balaji: ’செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா?’ அமலாக்கத்துறை பதில் தர உத்தரவு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது அமலாக்கத்துறை பதில் தர சென்னை முதன்மை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து துறையில் லஞ்சம் பெற்ற பணத்தை சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி சட்டவிரோத பணப்பறிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டபோது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கு எதிராக ஜாமீன் கேட்டு மேல்முறையீடு செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்திருந்தது.
இதனால் புதிதாக ஜாமீன் மனுவை தயார் செய்து புதிய மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அல்லி முன்னிலையில் இன்று நடைபெற்றது. அதில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆவணங்கள் போலியாக தயார் செய்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது நடவடிக்கையை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ளதால் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் தர வேண்டும் என செந்தில் பாலாஜி கோரி இருந்தார்.
இந்த வழக்கு இன்று முதல் முறையாக வருதால் அமலாக்கத்துறை பதில் தர உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 8ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.