இனி விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றால் 10 ஆண்டுகள் சிறை! புதிய சட்டத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு!
சாலையில் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக டிரக் லாரி மற்றும் பஸ் ஓட்டுநர்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலையில் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றால் அவர்களுக்கான தண்டனை என்ன என இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
மத்திய அரசு பாரதிய நியாய சன்ஹிதா என்ற பெயரில் பல்வேறு சட்ட பிரிவுகளில் உள்ள தண்டனைகளை மாற்றி வருகிறது. அதன்படி தற்போது இந்தியாவில் சாலையில் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுவது என்பது ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் விபத்து ஏற்பட்டு விட்டால் உடனடியாக இந்த விபத்தில் ஈடுபட்ட அனைத்து வாகன ஓட்டிகளும் நின்று அந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிக்கப்படாதவர்கள் கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும்.
ஆனால் சாலையில் நடக்கும் பல விபத்துகளில் வாகன ஓட்டிகள் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்று விடுகின்றனர். இப்படியாக இந்தியா முழுவதும் அடையாளம் தெரியாத வாகனங்களால் சுமார் 50,000 பேர் ஆண்டுக்கு மரணம் அடைகின்றனர். இதனால் இதன் எண்ணிக்கையை குறைக்க இந்தியா முழுவதும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றால் அவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க பாரத் நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் புதிய வழிமுறைகளை கொண்டு வந்துள்ளது.
தற்போது வரை விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றால் அந்த வாகன ஓட்டிக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. மேலும் இந்த விபத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை காலத்தில் ஜாமினில் வெளியே வரவும் உரிமை உள்ளது என்ற நிலை இருக்கிறது. ஆனால் புதிய சட்ட திருத்தத்தில் இந்த சட்டம் கடுமையாக்கப்பட்ட தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.