நீங்கள் இருப்பது மொட்டை மாடி வீடா..? ஆயிரக்கணக்கில் வருவாய் ஈட்ட வழிகள் இதோ
உங்கள் வீட்டின் மொட்டை மாடியை, நமக்கான சூழ்நிலைகளைப் பொருத்து வருமானம் தரக் கூடிய இடமாக நாம் மாற்றிக் கொள்ள முடியும். பணத்தை நோக்கி இயந்திரமாக சுழன்று கொண்டிருக்கக் கூடிய உலகில் இன்று எண்ணற்ற வணிக வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்குப் பெரும் தொகை செலவிட வேண்டுமோ என்று எண்ணி நாம் தயக்கம் காட்ட தேவையில்லை. முதலில் திட்டம், முயற்சி, செயல்பாடு, ஓரளவு முதலீடு போன்றவை இருந்தாலே போதுமானது. அந்த வகையில் மொட்டை மாடியை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று இப்போது பார்க்கலாம்.
இன்றைய சூழலில் காய்கறிக்கு ஆகும் செலவே பெரும் தொகையாக இருக்கிறது. அதுவும் போக ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்படாத இயற்கையான காய்கறிகள், கீரைகள் போன்றவை கிடைப்பது அபூர்வமாக உள்ளது. அந்த வகையில் பழைய பக்கெட், பாலித்தீன் கவர்கள் போன்றவற்றில் மண் நிரப்பி மாடித்தோட்டத்தை நம்முடைய சொந்த பயன்பாட்டிற்கு முதலில் உருவாக்கினாலே பெரும் செலவு மிச்சமாகும். தொழிலை கற்றுக் கொண்டு கத்திரிக்காய், வெண்டைக்காய் போன்ற நல்ல விளைச்சல் கிடைக்கக் கூடிய பயிர்களை நட்டால், அதில் கிடைக்கும் காய்கறிகளை அக்கம், பக்கத்தினருக்கு விற்பனை செய்யலாம்.
சூரிய மின் உற்பத்தி தகடு :
வீட்டின் மாடியில் சூரிய மின் உற்பத்தி தகடுகளை பொருத்தினால், அதில் இருந்து நாமே மின்சாரத்தை நேரடியாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தகடுகளை அமைக்க அரசு கொடுக்கும் மானியத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் மாடியின் அளவைப் பொருத்து, மின் உற்பத்தி மூலமாக குறைந்தப்பட்சம் ரூ.25,000 ஈட்டலாம்.