உலகளந்த பெருமாளை தாிசித்தால் இத்தனை நன்மைகளா?
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் அமைந்துள்ளது திாிவிக்கிரம சுவாமி எனும் உலகளந்த பெருமாள் கோயில். பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 42 வது தலமாக விளங்குகிறது. இந்த கோயிலின் பெருமாள் திருவுருவம் ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறார். உலகளந்த பெருமாளை தரிசிக்க வருபவர்கள் அவரது திருமேனியை அண்ணாா்ந்து தான் பார்க்க வேண்டும்.
இச்சிலையில் மேலும் ஒரு சிறப்பாக வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி தருகிறார். திருவிக்கிரமன் பத்தினி (திருவிக்கிரமி) மிருகண்டு, மகாபலி எல்லோரும் காலடியிலேயே இருக்கிறார்கள்.
பல்லவர், சோழா், விஜயநகர மன்னா்கள் எனப் பலரும் திருப்பணி செய்து மகிழ்ந்த தலம், கர விமானம் கொண்ட திருக்கோயில் என எண்ணிலடங்காப் பெருமைகளை கொண்ட கோயிலாக விளங்குகிறது உலகளந்த பெருமாள் திருக்கோயிலாகும்.
லக்ஷ்மிநாராயணன், லக்ஷ்மிவராஹன், லக்ஷ்மி நரசிம்மன் மூவருக்கும் தனித்தனி சந்நிதிகள் இருக்கின்றன. மேலும், ராமர், உடையவர், திருக்கச்சி நம்பி, ஆண்டாள், மணவாள மாமுனிகளின் சந்நிதிகளும் தனித் தனியே அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலின் கிழக்கு கோபுரமானது பதினோரு நிலைகள் கொண்ட 192 அடி உயரமானது ஆகும். இது தவிர கிழக்கில் 7 நிலை கொண்ட ராசகோபுரம், வடக்கில் ஐந்து நிலை கொண்ட கட்டைக் கோபுரம், மேற்கில் ஏழுநிலை கொண்ட ராசகோபுரம், மூன்று நிலை கொண்ட திருமங்கை மன்னன் கோபுரம், வடக்கில் மூன்று நிலை கொண்ட வாசல் கோபுரம் மற்றும் தாயாா் சந்நிதியில் ஐந்து நிலை கிளிக் கோபுரம் ஆகிய கோபுரங்கள் அமைந்துள்ளன.
இக்கோயிலின் தலமரமாக புன்னை மரம் விளங்குகிறது. தலத் தீா்த்தங்கள் தென்பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம், சுக்கிர தீர்த்தம், மிருகண்ட தீர்த்தம் எனப் பதினோரு தீர்த்தங்கள் அமைந்துள்ளன.
திருமணப்பேறு, மகப்பேறு, மனநலன் வேண்டுவோா் இறையருள் பேறு வேண்டுவோா் என அனைத்திற்கும் நம்பிக்கைத் தலமாக இத்திருக்கோயில் விளங்குகிறது என்பது பக்தா்களின் நம்பிக்கை.