லோன் கிடைக்க இதுதான் ஒரே வழி… சிபில் ஸ்கோரை உன்னிப்பாக கவனிக்கும் 40% இந்தியர்கள்!
வங்கிகளிடம் இருந்து கடன் அல்லது கடன் அட்டை என எதுவாக இருந்தாலும், கிரெடிட் புள்ளிகள் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. கடன் கோருபவரின் முன் நிதி அளவீடுகள், செயல்பாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இந்த கிரெடிட் புள்ளிகளை (சிபில் ஸ்கோர்) தீர்மானிக்கிறது.
இதில் மக்கள் தங்களை எப்படி ஈடுபடுத்தியுள்ளனர் என்பது குறித்த ஒரு பகுப்பாய்வில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக, இது போன்ற நிதி சேவை காரியங்களில் பயனர்கள் தங்களை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வது கிடையாது. ஆனால், தற்போதைய நிலை வேறு. அனைத்து மக்களும் டிஜிட்டல் சேவைகளுக்கு மாறி வரும் வேளையில், தனக்கு வங்கி கடன் கிடைக்கும் வகையில் கிரெடிட் புள்ளிகள் இருக்கிறதா என்பதை அவர்கள் அவ்வப்போது சரிபார்த்துக் கொள்வதாக பகுபாய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
அதுவும், இதில் கலந்துகொண்ட 40 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் இதே பதிலை அளித்துள்ளனர். மக்கள் நிதி தொடர்பான விஷயங்களில் விழிப்புடன் இருப்பதை இந்த பகுப்பாய்வு முடிவுகள் உணர்த்தியுள்ளன. இந்த பகுப்பாய்வை நடத்தியது மணிவியூ (MoneyView) என்ற நிதி சார்ந்த சேவைகளை வழங்கும் தளம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
Moneyview வழங்கும் 2023 நுகர்வோர் கடன் தொடர்பான கணக்கெடுப்பு அறிக்கையின் கண்டுபிடிப்புகள் கீழே:
மாதாந்திர கிரெடிட் ஸ்கோர் கண்காணிப்பு: இதில் பங்கேற்பாளர்களில் 40 விழுக்காட்டினர், ஒவ்வொரு மாதமும் தங்கள் கிரெடிட் புள்ளிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் கூறியுள்ளனர். இது வளர்ந்து வரும் கடன் சார்ந்த விழிப்புணர்வை இது வெளிப்படுத்துகிறது.
கிரெடிட் ஸ்கோர் மேம்பாடு: பதிலளித்தவர்களில் பாதி பேர், அதாவது 50 விழுக்காட்டினர் தங்கள் கிரெடிட் புள்ளிகளை எந்தச் செலவும் இன்றி மேம்படுத்த பல்வேறு தளங்களில் இருந்து பரிந்துரைகளைப் பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.
கணக்கெடுக்கப்பட்டவர்களில் கணிசமாக 71 விழுக்காட்டினர் ரூ.30,000 முதல் ரூ.2,00,000 வரையில் நிதித் தேவை இருப்பதாக தெரிவித்தனர்.
கடன் வழங்குபவர் தேர்வு அளவுகோல்: கணக்கெடுக்கப்பட்ட நபர்களில், 26 விழுக்காட்டினர், நல்ல மதிப்புள்ள குறியீடுகள் கொண்ட கடன் வழங்குநரைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதே சமயம் 29 விழுக்கட்டினர் குறைந்தபட்ச செயலாக்கக் கட்டணத்தில் (ப்ராசசிங் சார்ஜ்) கவனம் செலுத்துகின்றனர். கூடுதலாக, 48 விழுக்காட்டினர் குறைந்த வட்டி விகிதத்தையும், 31 விழுக்காடு நபர்கள் அதிக கடன் தொகையையும், 25 விழுக்காட்டினர் உடனடி ஒப்புதல்களையும், 21 விழுக்காடு நபர்கள் விரைவான பணப் பரிமாற்றங்களையும் கடன் பெற அணுகும்போது எதிர்பார்க்கின்றனர். மேலும் 16 சதவீதம் பேர் முழு ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையை விரும்புகிறார்கள்.