ஆன்லைனில் ஆர்டர் செய்த ஷூ-க்கு பதிலாக வந்த கிழிந்த காலணி – கல்லூரி மாணவர் புகார் @ பொள்ளாச்சி
பொள்ளாச்சி: ஆன்லைனில் ஷூ ஆர்டர் செய்த கல்லூரி மாணவருக்கு பழைய கிழிந்த ஷூவையும், காலணியையும் நிறுவனம் அனுப்பியிருந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த அங்குலக்குறிச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரிஹரபிரியன். இவர், பிரபலமான ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் தனக்கு ஷூ ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து, ஆன்லைன் நிறுவனம் அவருக்கு கூரியர் மூலமாக அனுப்பியுள்ளது. பணம் செலுத்தி பார்சலை வாங்கி பிரித்து பார்த்த போது, கிழிந்த ஷூ மற்றும் பெண்கள் அணியும் கிழிந்த காலணியும் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர், அந்த பார்சலை திருப்பி அனுப்ப முடியாமல் தவித்து வருகிறார்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து கல்லூரி மாணவர் ஹரி ஹரபிரியன் கூறும்போது, ‘‘ஆன்லைன் மூலமாக கடந்த மாதம் 24-ம் தேதி ரூ.424-க்கு ஷூ ஆர்டர் செய்திருந்தேன். ஆன்லைன் நிறுவனம் அனுப்பிய பார்சலை பிரித்து பார்த்த போது ஒரு கிழிந்த பழைய ஷூ, ஒரு கிழிந்த காலணியும் இருந்தது. இது குறித்து எனக்கு பார்சல் அளித்த கூரியர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டேன். இதற்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை. நீங்கள் ஆர்டர் செய்த ஆன்லைன் நிறுவனம் தான் பொறுப்பு. அதை மீண்டும் ஆன்லைன் மூலமாக திருப்பி அனுப்புங்கள் எனக் கூறினர்.
சில நேரங்களில் திருப்பி அனுப்பும் போது, ஏற்கெனவே நாம் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக நிறம் அல்லது பொருளோ மாறி இருந்தால் திருப்பி அனுப்ப முடியவில்லை. சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்கு தொடர்பு கொண்டாலும், சரியான பதில் கிடைப்பதில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப் படுகின்றனர். எனவே, ஆன்லைன் வர்த்தகத்தில் இதுபோன்று ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்’’ என்றார்.