கோவை: குடியிருப்பு பகுதியில் குட்டியுடன் வலம் வந்த 4 காட்டு யானைகள் – வீடியோ
கோவை வடவள்ளி பொம்மனாம்பாளையம் அருகே குட்டியுடன் வந்த 4 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியி ல் திடீரென புகுந்ததால் அச்சத்தில் மக்கள் ஓட்டம் பிடித்தனர். யானைகளை வனத்துறையினர் விரட்டினர்.
Elephant | coimbatore: கோவை மருதமலை, நரசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு அருகே கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் உலா வருகிறது. இந்நிலையில், மருதமலை அருகே உள்ள வடவள்ளி பொம்மனாம்பாளையம் டான்சா நகர் சி பிளாக் பகுதியில் திடீரென குட்டியுடன் 4 காட்டு யானைகள் புகுந்தது. இதனை கண்ட அக்குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த கோவை சரக வனத்துறை ஊழியர்கள் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரம் போராடி குட்டியுடன் உலா வந்த யானைகளை வனத்துறையினர் மருதமலை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். ஆனால் வனப்பகுதிக்குள் சென்ற யானைகள் மீண்டும் பாரதியார் பல்கலைகழகம் அருகே வெளியே காட்டு யானைகள் வந்ததால், அங்கு விரைந்த வனத்துறையினர் பட்டாசுகளை வீசி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இந்நிலையில், வடவள்ளி பொம்மனாம்பாளையம் குடியிருப்பு பகுதியில் குட்டியுடன் காட்டு யானைகள் உலா வந்த காட்சிகளை குடியிருப்பு மக்கள் செல்போனில் பதிவு செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.