வைகுண்ட ஏகாதசி 2023 : எந்த நாளில் இரவு கண் விழிக்க வேண்டும்? விரதத்தை எப்போது துவங்க வேண்டும்?

வைகுண்ட ஏகாதசி விழா, ஸ்ரீரங்கம் மற்றும் திருப்பதியில் வெகு விமர்சையாக நடத்தப்படும் புகழ்பெற்ற விழாக்கள் ஆகும். வைகுண்ட ஏகாதசி என்றாலே இரவில் கண் விழிக்க வேண்டும், சொர்க்கவாசலை தரிசிக்க வேண்டும் என்று தான் அனைவரின் மனதிலும் தோன்றும். இந்த ஆண்டு எந்த நாளில் கண்விழித்து, எப்போது விரதத்தை துவக்கி, எந்த முறையில் விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

வைகுண்ட ஏகாதசி விரதம் :

விரதங்களிலேயே மிகவும் உயர்வானதாக கருதப்படுவது ஏகாதசி விரதம். ஆயிரம் நாக்குகள் கொண்ட ஆதிசேஷனால் கூட விளக்க முடியாத மகிமை பெற்றது ஏகாதசி விரதம் என்பார்கள். 15 நாட்களுக்கு ஒன்று என்ற விதத்தில் வருத்திற்கு 24 அல்லது 25, சில நேரங்களில் 26 ஏகாதசிகள் வருவது உண்டு. நம்முடைய பாவங்கள் அனைத்தும் தீர்ந்து, வாழ்வில் அனைத்திலும் வெற்றி பெற்று இறைவனின் திருவடிகளை பெற வேண்டும் என்பதே ஏகாதசி விரதத்தின் நோக்கமாகும். வருடத்தின் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருக்க முடியாதவர்கள், வருடத்திற்கு ஒருமுறையாவது இந்த ஏகாதசி விரதத்தை இருக்க வேண்டும் என்பதற்காக உண்டானதே மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி.

மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு மோட்ச ஏகாதசி என்றும் பெயர். மற்ற ஏகாதசிகளில் விரதம் இருக்க தவறியவர்களும் கூட இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் நிச்சயம் மோட்சத்தை தரக் கூடியது என்பதால் இதற்கு மோட்ச ஏகாதசி என்று பெயர். வைகுண்ட ஏகாதசி அன்று அனைத்து பெருமாள் கோவில்களிலும் அதிகாலையில் பரமபத வாசல் எனப்படும், சொர்க்கவாசல் திறக்கப்படும். இதை தரிசனம் செய்பவர்களுக்கு பெருமாளின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

வைகுண்ட ஏகாதசி 2023 தேதி :

2023ம் ஆண்டின் துவக்கத்தில் ஏற்கனவே ஒரு வைகுண்ட ஏகாதசி வந்து விட்டது. தற்போது இரண்டாவது முறையாக டிசம்பர் 23 ம் தேதி மீண்டும் வைகுண்ட ஏகாதசி வர உள்ளது. பொதுவாக வைகுண்ட ஏகாதசி விரதம் என்பது 3 நாட்கள் இருக்க வேண்டிய விரதமாகும். இந்த ஆண்டு எந்த நாளில் வைகுண்ட ஏகாதசி விரதத்தை துவக்கி, எந்த நாளில் நிறைவு செய்ய வேண்டும். எந்த நாளில் இரவு கண் விழிக்க வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த ஆண்டு இரண்டு நாட்கள் ஏகாதசி திதி உள்ளதால் எதை கணக்கில் எடுத்துக் கொண்டு, எந்த நாளில் விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்ற குழப்பமும் பலருக்கும் உள்ளது.

மோட்ச ஏகாதசி விரதம் துவங்கும் நேரம் :

இந்த ஆண்டு டிசம்பர் 22 ம் தேதி காலை 10 மணி வரை தசமி திதியும், அதற்கு பிறகு ஏகாதசி திதியும் அமைகிறது. டிசம்பர் 23 ம் தேதி காலை 06.27 வரை ஏகாதசி திதி உள்ளது. அதற்கு பிறகு துவாதசி திதி துவங்கி, டிசம்பர் 24 ம் தேதி காலை 07.13 வரை உள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏகாதசி திதியில் விரதத்தை துவங்கி, துவாதசி திதியிலேயே முடிக்க வேண்டும் என்பது விதி. இதனால் வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் டிசம்பர் 22 ம் தேதியே துவங்கி விட வேண்டும். அன்று பகல் பொழுது வரை உணவு உட்கொள்ளலாம். அன்று அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று விட்டு வந்து, விரதத்தை துவங்குவது சிறப்பானது. இரவில் முடிந்தவர்கள் உபவாசமாகவும், முடியாதவர்கள் எளிமையான உணவுகளையும் எடுத்துக் கொண்டு, அன்று இரவு வழக்கம் போல் தூங்கலாம்.

வைகுண்ட ஏகாதசி விரத முறைகள் :

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலை கணக்கில் வைத்தே மற்ற கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு டிசம்பர் 23 ம் தேதியன்று அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்படும். அதை டிவியிலோ அல்லது முடிந்தவர்கள் நேரிலோ சென்று தரிசித்து விட்டு அன்று முழுவதும் உபவாசமாக இருந்து விரதம் இருக்க வேண்டும். அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது என்பதால் முன்பே பறித்து வைத்தோ அல்லது கடைகளில் வாங்கியோ வைத்துக் கொள்ளலாம். இந்த துளசி இலைகளை பெருமாளுக்கு படைத்து விட்டு, தண்ணீரில் போட்டு வைத்து அதை நாள் முழுவதும் குடிக்க. தண்ணீர் எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம்.

எந்த நாளில் கண்விழிக்க வேண்டும்?

டிசம்பர் 23ம் தேதி முழுவதும் பெருமாளின் நாமங்களை சொல்லி, இறைவனின் சிந்தனையிலேயே இருப்பது மிகவும் சிறப்பானது. டிசம்பர் 23 ம் தேதி அன்று இரவு தான் கண் விழிக்க வேண்டும். டிசம்பர் 24 ம் தேதி காலை நெல்லிக்காய், அகத்திக்கீரை உள்ளிட்டவை சேர்த்த முழுமையான உணவு தயாரித்து, பெருமாளுக்கு படைத்து விட்டு, நாமும் உண்ணலாம். அதற்கு பிறகு பகலில் உணவு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தூங்கக் கூடாது. அன்று மாலை, வீட்டில் விளக்கேற்றி வைத்து பெருமாளை வணங்கி விட்டு, இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விரதம் இருக்க அருள் செய்ததற்கு நன்றி தெரிவித்து விட்டு, அதற்கு பிறகு தூங்க செல்லலாம்.

​2023 வைகுண்ட ஏகாதசி சிறப்பு ஏன்?

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், வைகுண்ட ஏகாதசியானது பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமையில் வருகிறது. இதனால் இந்த வைகுண்ட ஏகாதசி இரட்டிப்பு பலன் தருவதாக இருக்கும். பொதுவாகவே பெருமாளுக்கு சனிக்கிழமையில் விரதம் இருப்பது நல்லது. அதிலும் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியே சனிக்கிழமையில் வருவதால் இது இரண்டு மடங்கு புண்ணிய பலன்களை தரும் வைகுண்ட ஏகாதசியாக இருக்கும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *