சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு
சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு செய்துள்ளார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 1996 முதல் 2002 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. மேலும் அவர் மேல் முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு சிறை தண்டனை மட்டும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு செய்துள்ளார். வரும் 22ஆம் தேதி வரை விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய பொன்முடி, அவரின் மனைவிக்கு அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.