ஜெகன் அண்ணாவை வீழ்த்த முடியுமா? ஆந்திராவில் ‘உயிர்த்தெழுமா’ காங்கிரஸ்? களமிறங்கிய ‘இரட்டையர்’!
ஆந்திரா சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் களம் அனலடிக்க தொடங்கிவிட்டது. ஆந்திராவில் எங்கே இருக்கிறது என தேடுகிற காங்கிரஸ் கட்சியை உயிர்ப்பிக்க தெலுங்கானாவில் அபார வெற்றியை அறுவடை செய்து தந்த கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமாரும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் காங்கிரஸ் மேலிடத்தால் களமிறக்கப்பட்டுள்ளனராம்.
லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திராவில் தற்போது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திரா அரசியல் களத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் இடையேதான் போட்டி. பாஜக, காங்கிரஸ் போராடித்தான் பார்க்க வேண்டிய நிலைமை.
தெலுங்கானா தேர்தல்: தெலுங்கானா சட்டசபை தேர்தலின் போதும் தொடக்கத்தில் ஆட்சியில் இருந்த பிஆர்எஸ், பாஜக இடையேதான் போட்டி இருந்தது. ஆனால் ராகுல் பாதயாத்திரை, கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றி ஆகியவை தெலுங்கானாவில் காங்கிரஸை புதைகுழியில் இருந்து மீட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற உதவியது. தெலுங்கானாவில் காங்கிரஸை உயிர்ப்பித்தவர்களில் தற்போதைய முதல்வர் ரேவந்த் ரெட்டியும் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமாரும் முக்கியமானவர்கள்.
ஆந்திராவில் காங்கிரஸ்: தற்போது ஆந்திராவிலும் காங்கிரஸ் அப்படியான நிலைமையில்தான் உள்ளது. ஆகையால்தான் ஆந்திராவிலும் டிகே சிவகுமாரையும் ரேவந்த் ரெட்டியையும் காங்கிரஸ் களமிறக்கிவிட்டிருக்கிறது. ஆந்திராவில் காங்கிரஸுக்கு என ஒரு முகம் கிடையாது. காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு வங்கி இருக்கிறதா? இல்லையா? என்பதை சொல்லக் கூட ஆளில்லா துயரம்தான். இந்தநிலையில் ஆந்திரா சட்டசபை தேர்தலுடன் லோக்சபா தேர்தலும் நடைபெறுகிறது. லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அத்தனை இடங்களையும் மொத்தமாகவே அள்ளிவிடும் என்பதுதான் இதுவரையிலான கருத்து கணிப்புகளின் முடிவுகள்.
ஆந்திராவில் ஷர்மிளா: இதனால் லோக்சபா தேர்தலைவிட ஆந்திரா சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் தந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளாவை காங்கிரஸ் இணைத்துக் கொள்கிறது. ஆந்திரா மாநில காங்கிரஸ் தலைவராக ஷர்மிளா நியமிக்கப்பட்டு தேர்தலை எதிர்கொள்ளும் போது, அது ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் பெரும் அதிர்வலைகளைத் தரக் கூடும் என்பது காங்கிரஸின் எதிர்பார்ப்பு.
ஷர்மிளா தலைமைக்கு ஆதரவு?: ஒய்.எஸ்.ஆர். குடும்பத்தின் தீவிர விசுவாசிகளே இன்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியின் ஆணிவே. தேர்தல் வெற்றியை இலக்கு வைத்து அத்தகைய விசுவாசிகளான எம்.எல்.ஏக்கள் 80 பேருக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும் என தெரிவித்துள்ளார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. இதனால் அதிருப்தியில் இருக்கும் இந்த எம்.எல்.ஏக்கள் ஒய்.எஸ்.ஆர். வாரிசுகளில் ஒன்றான ஷர்மிளா பக்கம் கூண்டோடு போவதில் வியப்பேதும் இருக்காது; விமர்சனங்களும் பெரிதாக ஒர்க் அவுட் ஆகாது. இதுவே காங்கிரஸுக்கு பெரும் பலம் என்பதுதான் அக்கட்சியின் கணக்கு.ரேவந்த் ரெட்டியும் டிகே சிவகுமாரும் போடும் இந்த கணக்குகள் காங்கிரஸ் கட்சியை தெலுங்கானாவை போல சாம்பலில் இருந்து உயிர்த்தெழ வைக்குமா? என்பது சில மாதங்களில் தெரிந்துவிடும்.