உரக்க ஒலித்த ராம் சியா ராம்.. உடனே கோலி செய்த செயல்.. வியந்து போன தென்னாப்பிரிக்க ரசிகர்கள்
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் பங்கேற்று ஆடி வருகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது இந்திய அணி.
இந்த நிலையில், கேப் டவுனில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய வேகப் பந்துவீச்சாளர் சிராஜ் சிறப்பாக, துல்லியமாக பந்து வீச தென்னாப்பிரிக்க அணி திணறிப் போய் தங்கள் சொந்த மண்ணில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்து பரிதாப நிலையை அடைந்தனர்.
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் கேஷவ் மகாராஜ் பேட்டிங் செய்ய வந்த போது மைதானத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ஆதிபுருஷ் படத்தின் பாடலான “ராம் சியா ராம்” பாடல் ஒளிபரப்பப்பட்டது. இது ராமரை குறித்த பாடல் என்பதால் இந்திய மைதானங்களில் மட்டுமே ஒளிபரப்பப்படும். ஆனால், ஆச்சரியமாக தென்னாப்பிரிக்காவிலும் இந்தப் பாடலை மைதானத்தில் பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு காரணம் கேஷவ் மகாராஜ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதோடு அவர் தீவிரமான அனுமான் பக்தர்.
அதன் காரணமாக இந்தியா – தென்னாப்பிரிக்கா மோதும் டெஸ்ட் தொடரில் அந்தப் பாடல் ஒலிக்கிறது. இரண்டாவது டெஸ்ட்டில் கேஷவ் மகாராஜ் பேட்டிங் செய்ய வந்த போது, அந்தப் பாடல் ஒலித்தது. அப்போது விராட் கோலி ராமர் அம்பு விடுவது போல அந்த பாடல் காட்சியில் இடம் பெறும் சம்பவத்தை நினைவுகூரும் கையில் அம்பு விடுவது போல சைகை செய்தார்.
பின்னர் தான் வேடிக்கையாக, கேலி செய்யும் வகையில் இதை செய்யவில்லை என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கைகளை கூப்பி வணங்கினார். தென்னாப்பிரிக்க ரசிகர்களுக்கு என்ன நடக்கிறது என புரியாத நிலையில் விராட் கோலியின் செய்கைகளை வியப்புடன் பார்த்தனர். அதே சமயம், இந்திய ரசிகர்கள் சிலர் விராட் கோலி ராமரை வணங்கி விட்டார் என அதை சமூக ஊடகங்களில் பெரிய விஷயமாக மாற்றி டிரென்டிங் செய்தனர்.