தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் மீது தாக்குதல்: செய்தியாளர்கள் சந்திப்பின்போது கழுத்தில் கத்திக்குத்து
தென்கொரியா எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியுங், அந்நாட்டின் துறைமுக நகரமான பூசானில் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது கக்தியால் குத்தப்பட்டார். லீ புதிய விமானநிலையத்தை பார்வையிட்ட பின் செய்தியார்களுடன் பேசிய படி தனது காருக்கு நடந்து செல்லும் போது அவருக்கு முன்னாள் சென்ற நபர் லீ மீது பாய்ந்து அவரின் கழுத்தில் கத்தியால் குத்தினார். இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்து கீழே விழும் லீக்கு மக்கள் உதவி செய்தனர். அதில் ஒருவர் தனது கைக்குட்டையால் அவரின் கழுத்தைக் அழுத்திப் பிடிப்பது உள்ளிட்ட காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
காயம்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு, பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். கத்திக்குத்து காயத்தால் லீக்கு ரத்தப்போக்கு இருந்த போதிலும் அவர் நினைவிழக்கவில்லை. உடனடியாக அவர் பூசன் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய லீயின் ஜனநாயகக் கட்சி எம்.பி. குவான் சில் சியுங் கூறுகையில், “இது எதிர்க்கட்சித் தலைவர் லீக்கு எதிரான தீவிரவாத தாக்குதல், ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலான இதுபோன்ற செயல்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. லீயின் நிலைமை குறித்த முழுமையான மருத்துவ அறிக்கைக்காக காத்திருக்கிறோம். இந்த தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
அவரின் கழுத்தில் ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ரத்தப்போக்கு குறைவாகவே உள்ளது. அவர் சுயநினைவில் இருக்கிறார் என்று பூசான் நகர போலீஸார் தெரிவித்துள்ளனர். லீயை தாக்கியவரை போலீஸார் கைது செய்துள்ளனர் என்று யுன்ஹப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.