சுரேஷ் ரெய்னாவுக்கு மாற்று வீரர்.. ஏலத்தில் வாங்கியதற்கு இதுதான் காரணம்.. சிஎஸ்கே நிர்வாகி ஓபன் டாக்
சிஎஸ்கே அணியின் ஜாம்பவானான சுரேஷ் ரெய்னாவுக்கான மாற்று வீரராக தான் ரச்சின் ரவீந்திராவை பார்ப்பதாக அந்த அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா. கேப்டன் தோனி எங்கெல்லாம் கைகளை காட்டுகிறாரோ, அங்கெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் பாயும் நம்பிக்கையான வீரர். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று தோனிக்கு தேவையான அனைத்து நேரங்களிலும் சுரேஷ் ரெய்னா அனைத்து நேரங்களிலும் தயாராக இருந்துள்ளார். இதனாலேயே அவரை ரசிகர்கள் “சின்ன தல” என்று அழைத்து வருகின்றனர்.
2022ல் நடைபெற்ற மெகா ஏலத்தின் போது சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே அணி கைவிட்டது. சிஎஸ்கே அணி நிர்வாகம் கைவிட்டாலும், சிஎஸ்கே ஆடும் போட்டிகளுக்கு தவறாமல் ஆஜராகிவிடுவார் ரெய்னா. இவருக்கு பதிலாக சிஎஸ்கே அணி தரப்பில் மொயின் அலி மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் சிஎஸ்கே அணியில் விளையாடினர். அதன்பின் கடந்த சீசனில் அஜிங்கியா ரஹானே 3வது இடத்தில் இறங்கி ஆடினார்.
இந்த நிலையில் அண்மையில் முடிந்த மினி ஏலத்தில் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திராவை ரூ.1.8 கோடிக்கு சிஎஸ்கே அணி வாங்கியது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் உலகக்கோப்பை தொடரில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா இவ்வளவு சிறிய தொகைக்கு செல்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
இதன்பின் மொயின் அலிக்கான பேக் அப் வீரராகவும் ரச்சின் ரவீந்திரா இருக்கலாம் என்று பார்க்கப்பட்டது. ஆனால் மொயின் அலி அளவிற்கு ரச்சின் ரவீந்திராவால் ஸ்பின் செய்ய முடியாது என்பதால், பேட்டிங் ஆல்ரவுண்டராகவே இவர் பேக் அப்பில் இருப்பார் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் பேசுகையில், சுரேஷ் ரெய்னாவுக்கான மாற்று வீரராக தான் ரச்சின் ரவீந்திராவை வாங்கினோம்.
அதற்காக உடனடியாக சிஎஸ்கே பிளேயிங் லெவனில் இருப்பார் என்று சொல்லவில்லை. ஏனென்றால் சுரேஷ் ரெய்னாவே 2 ஆண்டுகளுக்கு பின் பிளேயிங் லெவனில் ராபின் உத்தப்பாவிடம் இடத்தை இழந்தார். அதனால் நிச்சயம் ரஹானே தான் 3வது இடத்தில் களமிறங்குவார். ஒருவேளை காம்பினேஷன் சரி வரவில்லை என்றால், மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
ஐபிஎல் தொடருக்கு முன் ரச்சின் ரவீந்திரா விளையாடும் டி20 போட்டிகளை பார்ப்போம். அதில் அவர் சிறப்பாக செயல்பட்டால், பிளேயிங் லெவன் வாய்ப்பு கிடைக்கலாம். அதேபோல் பயிற்சியாளர் பிளேமிங் அவரை பேக் அப் வீரராக தான் பார்க்கிறார். நிச்சயம் அவர் திறமையான வீரர் என்பதில் மாற்று கருத்து இல்லை என்று தெரிவித்துள்ளார்.