சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பாட்னா பைரேட்ஸுடன் தமிழ் தலைவாஸ் இன்று மோதல்
புரோ கபடி லீக் தொடரின் 10-வது சீசன் போட்டிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இதில் சென்னை நகர போட்டிகள் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இன்று (22-ம்தேதி) முதல் வரும் 27-ம் தேதி நடைபெறுகின்றன. சென்னை கட்ட போட்டிகளில் மொத்தம் 11 ஆட்டங்கள் நடத்தப்பட உள்ளது. இன்று இரவு 8மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.
தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ஹரியாணா ஸ்டீலர்ஸ் – தெலுகு டைட்டன்ஸ் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னையில் 4 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் புரோ கபடி லீக்தொடரின் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 12 அணிகள் கலந்து கொண்டுள்ள தொடரில் 11-வது இடத்தில் உள்ளது. எனினும் மற்ற அணிகளை விட தமிழ்தலைவாஸ் குறைந்த ஆட்டங்களிலேயே விளையாடி உள்ளது.
இன்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் வெற்றி பெறும் பட்சத்தில் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. கேப்டன் சாகர் ராதி, அஜிங்க்ய பவார், நரேந்தர், விஷால் சாஹல், நித்தின் சிங், ஹிமான்ஷு நார்வால், ஜத்தின் ஆகியோருடன் தமிழகத்தை சேர்ந்த கே.செல்வமணி, மாசான முத்து, அபிஷேக், சதீஷ் கண்ணன் மற்றும் சாஹில் குலியா, மொஹித் ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.
தமிழ் தலைவாஸ் அணி தனது சொந்த மண்ணில் 2-வது ஆட்டத்தில் 23-ம் தேதி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸுடனும், 25-ம் தேதி ஹரியாணா ஸ்டீலர்ஸுடனும், 27-ம் தேதி குஜராத் ஜெயண்ட்ஸுடனும் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டங்களில் கணிசமான வெற்றிகளை குவித்து புள்ளிகள் பட்டியலில் சீரான முன்னேற்றம் காண்பதில் தமிழ் தலைவாஸ் அணி கவனம் செலுத்தக்கூடும்.
தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் அஷான் குமார் கூறும்போது, ‘எங்கள் அணியை பொறுத்தவரையில் பலவீனம் என எதுவும் இல்லை. கடந்த ஆட்டங்கள் செய்த தவறுகளை பயிற்சியின் போது திருத்திக் கொண்டுள்ளோம். இதை ஆட்டத்தின் போது செயல்படுத்துவோம். 4 வருடங்களுக்குப் பிறகு சொந்த மைதானத்தில் விளையாடுகிறோம். எந்த ஒருஅணிக்கும் சொந்த மைதான போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததே அந்த வகையில் இங்கு நாங்கள் விளையாட உள்ள 4 ஆட்டங்களையும் சிறப்பாக நிறைவு செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார்.