பிரதமர் மோடியை இன்று டெல்லியில் சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுவதற்காக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெல்லி சென்றுள்ளார்.
இளைஞர்களுக்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள், தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 நகரங்களில் நடத்தப்பட உள்ளன. இந்த விளையாட்டுப் போட்டிகள், வரும் 19-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. போட்டியின் நிறைவு விழாவை சென்னையில் கோலாகலமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுப்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லிக்கு நேற்று மாலை புறப்பட்டுச் சென்றார்.
பிரதமரை சந்திக்கும் போது, தமிழ்நாட்டிற்கான நிதியை வழங்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்தார். இதனிடையே நேற்றிரவு டெல்லி சென்றடைந்த உதயநிதி, பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்து, கேலோ இந்தியா விளையாட்டுத் தொடருக்கான அழைப்பிதழை வழங்க உள்ளார்.