“மனம் நொந்து போனேன்” – ஜக்தீப் தன்கர் மிமிக்ரி விவகாரத்தில் குடியரசுத் தலைவர் வேதனை
‘நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரை போல நடித்து மிமிக்ரி செய்த விதத்தைப் பார்த்து மனம் நொந்து போனேன்’ என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜனாதிபதி அலுவலக எக்ஸ் தள பதிவில், ‘நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசுத் துணைத் தலைவர் அவமானப்படுத்தப்பட்ட விதத்தைப் பார்த்து மனம் நொந்து போனேன். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்தலாம். ஆனால் அது கண்ணியம் மற்றும் மரியாதை நிறைந்ததாக இருக்க வேண்டும். அதுதான் நாடாளுமன்ற பாரம்பரியம் என்று நாம் பெருமைப்படுகிறோம். அதை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிலைநாட்ட வேண்டும் என்று இந்திய மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது எம்.பி.,க்கள் கிண்டல் குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா கவலை மற்றும் வேதனை தெரிவித்தார்.
சம்பவத்தின் பின்னணி: மக்களவை அத்துமீறல் சம்பவத்துக்குப் பின்பு இதுவரை 141 எம்.பி.க்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காலை இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் போது திரிணமூல் காங்கிரஸின் எம்.பி கல்யாண பானர்ஜி, மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் அவை நடவடிக்கையின்போது செய்வதை போல நடித்துக் (மிமிக்ரி) காட்டினார். அப்போது, ராகுல் காந்தி, அதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். ஜகதீப் தன்கரை போல திரிணமூல் காங்கிரஸ் எம்.பி நடித்துக் காட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
பாஜக இந்த செயலுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தது. குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரும், ‘அரசியல் கட்சிகளுக்குள் பரிமாற்றங்கள் இருக்கலாம். ஆனால், மாநிலங்களவைத் தலைவரை கேலி (மிமிக்ரி) செய்யும் எம்.பி.,யை மற்றொரு கட்சியின் மூத்த தலைவர் வீடியோ எடுக்கிறார். இது முட்டாள்தனமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்று தனது கண்டனத்தை தெரிவித்தார். இவை சர்ச்சையான நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஜக்தீப் தன்கரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்தார்.
இது தொடர்பாக தன்கர் எக்ஸ் பக்கத்தில், ‘சில மாண்புமிகு உறுப்பினர்கள் அரங்கேற்றிய மோசமான நாடகம் குறித்தும், அது மாட்சிமை பொருந்திய நாடாளுமன்ற வளாகத்திலேயே அரங்கேற்றப்பட்டது குறித்தும் மிகுந்த வலியடைந்ததாக பிரதமர் மோடி என்னிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார். இதுபோன்ற சிறுமைகளை 20 வருடங்களாக தான் அனுபவித்து வருவதாகக் கூறினார். ஆனால், அரசியலமைப்புப் பதவியில் உள்ளவருக்கு, அதுவும் குடியரசு துணைத் தலைவருக்கே, நாடாளுமன்ற வளாகத்திலேயே அத்தகைய சம்பவம் நடந்தது துரதிர்ஷடவசமானது என்று பிரதமர் கூறினார்’ எனப் பதிவிட்டுள்ளார்.
If the country was wondering why Opposition MPs were suspended, here is the reason…
TMC MP Kalyan Banerjee mocked the Honourable Vice President, while Rahul Gandhi lustily cheered him on. One can imagine how reckless and violative they have been of the House! pic.twitter.com/5o6VTTyF9C
— BJP (@BJP4India) December 19, 2023