மகளின் பிறந்த நாள்… வெளிநாட்டு பெண்ணுடன் டான்ஸ் : நடிகர் அஜித் வீடியோ வைரல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில், விடா முயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் இடைவிடாமல் நடைபெற்று வருகிறது. ஆனால் புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக படப்பிடிப்பில் இடைவெளி விடப்பட்டுள்ளது.
இந்த இடைவெளியில் படக்குழுவினர் இந்தியா திரும்பிய நிலையில், நடிகர் அஜத் தனது குடும்பத்துடன் தூபாயில் இருக்கும் வீட்டில் தங்கியுள்ளார். இங்கு புத்தாண்டு தினத்தை கொண்டாடிய அஜித், தனது மூத்த மகள் அனோஷ்காவின் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடியுள்ளார். மகளின் 16-வது பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படத்தை நடிகை ஷாலினி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் மகளின் பிறந்த நாள் நிகழ்ச்சியில், நடிகர் அஜித் ஒரு பெண்ணுடன் இணைந்து நடனமாடும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள இடத்தில் தனது துணிவு படத்தில் இடம் பெற்றுள்ள சில்லா சில்லா என்ற பாடலுக்கு வெளிநாட்டு பெண்ணுடன் அஜித் நடனமாடியுள்ளார். முதலில் ஆடும் அஜித் கேமரா இருப்பதை பார்த்துவிட்டு அப்படியே நின்றுவிடுகிறார்.
இந்த வீடியோ பதிவு ட்ரெண்டாகி வரும் நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத அஜித், மகளின் பிறந்த நாளில் வெளிநாட்டு பெண்ணுடன் நடனமாடுகிறார் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேபோல் புத்தாண்டு தினத்தில் விஜய் 68 படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி விஜய் ரசிகர்களை திருப்தி படுத்திய நிலையில், விடா முயற்சி அப்டேட் வரவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.