IND vs SA : எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. ஒதுங்கிய ரோஹித்.. கேப்டன் கோலிக்கு கட்டுப்பட்ட இந்திய வீரர்கள்
கேப் டவுன் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் 23 விக்கெட்கள் வீழ்ந்த போதும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் நாளில் தென்னாப்பிரிக்காவை 55 ரன்களுக்கும், இரண்டாவது நாளில் 176 ரன்களுக்கும் ஆல் – அவுட் செய்தது இந்திய அணி.
இந்திய அணியின் அபாரமான செயல்பாட்டுக்கு விராட் கோலி தான் காரணம். கிட்டத்தட்ட அவர் தான் அணியை கேப்டன் போல வழிநடத்தினார் என ரசிகர்கள் பல்வேறு சம்பவங்களை, நேரலையில் காட்டப்பட்ட காட்சிகளை சுட்டிக் காட்டி வருகின்றனர். அதில் உண்மையும் உள்ளது.
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா போட்டியின் இடையே சிறிது நேரம் ஓய்வு எடுக்க மைதானத்தை விட்டு சென்றார். அப்போது துணை கேப்டன் பும்ரா தான் வீரர்களை உற்சாகப்படுத்தி அணியை வழிநடத்தி இருக்க வேண்டும்.
ஆனால், அப்போது விராட் கோலி கேப்டனாக முன் நின்று மற்ற வீரர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என கூறியதோடு இடைவேளை முடிந்து ஆடச் சென்ற போது உற்சாகமூட்டி பேசினார். அடுத்து இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் அன்று ரோஹித் சர்மா களத்தில் இருந்த போதும் விராட் கோலி தன் டெஸ்ட் கேப்டன்சி அனுபவத்தை முன் வைத்து ரோஹித் சர்மாவுக்கு ஆலோசனைகளை கூறினார்.
அதன் பின் முகமது சிராஜ் பந்து வீசிய போது பேட்ஸ்மேன் என்ன செய்கிறார்?, அவருக்கு எந்த இடத்தில் பந்து வீசினால் விக்கெட் கிடைக்கும் என கூறினார். அதே போல விக்கெட்டும் விழுந்தது. ரோஹித் சர்மாவுக்கு அப்போது பீல்டிங் நிறுத்துவது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார் கோலி. அதுவும் ஒரு விக்கெட் விழ காரணமாக இருந்தது.