உலகம் எங்கே போகுது? விர்ச்சுவல் ரியாலிட்டியில் பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுமி.. பகீர் புகார்!

மெட்டாவெர்ஸ் எனும் விர்ச்சுவல் ரியாலிட்டி உலகில் 16 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி இருக்கும் சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம் பரவலாகி வருகிறது. வருங்காலத்தை AI, VR டெக்னாலஜிகளே ஆளும் என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். சினிமா, வீடியோ கேம்ஸ் என பல தளங்களில் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் தற்போது அசுர பாய்ச்சல்களை நிகழ்த்தி வருகிறது.

நாம் வாழ்வது போன்றே நம்மை உணரச் செய்யும் சக்தி கொண்ட கற்பனை உலகத்தை உருவாக்குவது விர்ச்சுவல் ரியாலிட்டி. ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ‘மெட்டாவெர்ஸ்’ என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளது.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிஜ உலகத்திற்கு அப்பால் இருக்கும் மெய்நிகர் உலகு இந்த மெட்டாவெர்ஸ். திருமணங்கள், பார்ட்டிகள், சந்திப்புகள், மீட்டிங்குகள் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் என மெட்டாவெர்சில் அரங்கேறி வருகின்றன. இந்த மெட்டாவெர்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ கேம் ஒன்றில் தான் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி, விர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவத்துக்கான வழக்கமான உபகரணங்களான வி.ஆர். கண்ணாடி, ஹெட்செட் ஆகியவற்றை அணிந்து மெட்டாவெர்ஸில் களமிறங்கியுள்ளார். அந்தச் சிறுமியின் மெய்நிகர் வடிவமான ‘அவதார்’ மெட்டாவெர்ஸில் உலவும்போது, அதேபோன்று அவதார்களோடு வந்த ஆண்கள் அந்தச் சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக அந்தச் சிறுமி அளித்த புகாரின் பேரில் இங்கிலாந்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விர்ச்சுவல் ரியாலிட்டி கேமில் தனது அவதார் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால், அப்பெண்ணுக்கு உடல்ரீதியாக காயங்கள் எதுவும் இல்லை என்றபோதும், பலாத்காரத்துக்கு உள்ளாகும் பெண் அனுபவிக்கும் அனைத்து கொடுமைகளையும் மனரீதியாக அவர் அனுபவித்துள்ளார்.

அதனால், கிட்டத்தட்ட நிஜத்தில், பாலியல் வன்கொடுமையை அனுபவிக்கும் பெண்ணின் வலிகளை உணர்ந்துள்ளார். அதன் அடிப்படையில் தான் தன்னை பலாத்காரம் செய்த அவதார்கள் மீது, அதாவது அந்த அவதாரில் உள்ள உண்மையான நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

முதலில் இந்த புகாரால் அதிர்ந்துபோன போலீசார் மெட்டாவெர்ஸ் உலகில் சஞ்சரித்த குற்றவாளிகளை எப்படி கண்டறிவது, எப்படி நடவடிக்கை எடுப்பது என்று குழம்பினர். பின்னர் சட்ட வல்லுநர்கள், சைபர் தொழில்நுட்ப நிபுணர்கள் என பலரையும் ஆலோசித்து, அவதார் மூலம் தவறு செய்தவர்களை கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

விர்ச்சுவல் ரியாலிட்டி உலகில், முதல் முறையாக பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தொழில்நுட்ப உலகையே அதிர வைத்துள்ளது. விர்ச்சுவல் உலகில் நிகழ்த்தப்படும் குற்றங்களுக்கான சட்ட கட்டமைப்பையும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் உள்ளன. ஆக, இனி நாம் பார்க்கப்போகும் செய்திகள் எல்லாம் நம் கற்பனைக்கே அப்பாற்பட்டவையாக இருக்கக்கூடும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *