பூமிக்கு அடியில் என்னதான் நடக்கிறது? – விஞ்ஞானிகளையே குழப்பத்தில் ஆழ்த்திய ஜப்பான் பூகம்பம்
புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் உலகமே ஈடுபட்டு வந்த நிலையில், ஜப்பானுக்குத் துக்க தினமாக அமைந்ததன் காரணம், இஷிகாவா தீவில் 7.6 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட மகா பூகம்பம் தாக்கியதில் உயிரிழப்புகளும், மக்கள் பரிதவிப்பு அலறல்களும், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததும் ஆகும்.
இதோடு நிற்காமல் நூற்றுக்கணக்கான பின்னதிர்வுகள், சுனாமி எச்சரிக்கை, பேரலைகள் முதலானவை ஜப்பான் மக்களை அறியா பீதிகளுக்கு இட்டுச் சென்றது. மக்கள் மட்டுமல்ல, நிலநடுக்க ஆய்வாளர்கள், பூகம்ப ஆய்வு விஞ்ஞானிகளையும் இது குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜப்பான் உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும், ஏனெனில், ஜப்பான் நாடு நான்கு ஒன்றிணைந்த டெக்டானிக் பெருந்தாங்கு பாறைகளின் மேல் அமர்ந்திருக்கிறது. இவை ஒன்றுடன் ஒன்று தொடர்ந்து பெரிய அளவில் உராய்வுகளைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 நிலநடுக்கங்கள் ஜப்பான் நாட்டைத் தாக்குகின்றன. இருப்பினும், பெரும்பாலானவை உணர முடியாத அளவுக்கு மிதமானவைகளே.
ஜப்பானில் உள்ள கனாசாவா பல்கலைக்கழகத்தின் நில அதிர்வு நிபுணர் யோஷிஹிரோ ஹிராமட்சு, ‘ஜப்பானில் பெரும்பாலான பெரிய பூகம்பங்கள் கிழக்கு கடற்கரையில் உள்ள பசிபிக் டெக்டானிக் பெரும்பாறை காரணமாக ஏற்படுகின்றன. இது வட அமெரிக்க டெக்டானிக் பெருந்தாங்கு பாறையின் அடியில் சரிவதால் பெரிய பூகம்பங்களை ஏற்படுத்துகிறது. 2011-இல் தோஹோகு பகுதியைத் தாக்கிய 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்துபேரலை சுனாமியைத் தூண்டியது. இந்த பூகம்பம் ஜப்பானில் இதுவரை பதிவு செய்யப்படாத பெரும் நிலநடுக்கமாக ஆனதற்கான காரணியாக பசிபிக் பிளேட் வட அமெரிக்க பிளேட்டுக்கு அடியில் சரிந்ததைக் குறிப்பிடலாம்’ என்கிறார்.
புத்தாண்டு முதல் தினத்தன்று 7.6 ரிக்டர் பூகம்பம் தாக்கிய இஷிகாவா தீவிலும் நிலநடுக்கங்கள் புதிதல்ல. 2020-ம் ஆண்டு முதல் 500 நிலநடுக்கங்கள் ஏற்பட்ட பகுதிதான் இது. மெல்போர்னில் உள்ள நிலநடுக்க ஆய்வு மையத்தைச் சேர்ந்த நிலவியல் ஆய்வாளர் ஆடம் பாஸ்கல் கூறும்போது, ‘நாட்டின் கிழக்குப் பகுதியில் ஏற்படும் பூகம்பங்களை விட இத்தகைய பூகம்பங்கள் வித்தியாசமானவை. இப்பகுதியில் டெக்டானிக் பிளேட்டின் எல்லையில் பூகம்பம் ஏற்படுவதில்லை. மாறாக, டெக்டானிக் பிளேட்டுகளின் உள்ளேயே பாறைத்தளங்களில் உள்ள இடைமுறிவு (fault lines) அல்லது பெரும்பிளவு காரணமாக ஏற்படுகிறது.
அதாவது, டெக்டானிக் பிளேட்டுகள் ஒன்றுக்கொன்று எதிராகத் தள்ளப்படும்போது இந்த பாறைத்தள இடைமுறிவு அழுத்தத்தின் கீழ் வைக்கப்படுகின்றன. அழுத்தம் அதிகமாக அதிகமாக பிளவுக்கு மேல் இருக்கும் பாறைப்பகுதி கீழ்நோக்கி சரியும் இது நார்மல் என்று அழைக்கப்படுகிறது. மாறாக, இடைமுறிவுக்குக் கீழ் இருக்கும் பகுதி நகர்ந்தால் அது ரிவர்ஸ் ஃபால்ட் என்று அழைக்கப்படுகிறது. இஷிகாவாவில் அன்று ஏற்பட்டது இந்த இரண்டாம் வகை இடப்பெயர்வுதான். அதனால்தான் விளைவுகள் படுமோசமாகப் போனது’ என்றார்.
பாறைத்தளங்களில் இடைமுறிவு எனப்படும் fault-கள் பூகம்பம் தாக்கிய நோட்டோ பெனின்சுலாவுக்குக் கீழ் 150 கிமீ தூரம் வரை உள்ளதாகும் என்கிறார் கியோட்டோ பல்கலைக் கழக நிலநடுக்க ஆய்வாளர் அய்டரோ கேட்டோ. இவர் மேலும் கூறும்போது, ‘இந்த ஃபால்ட் லைன் மிகவும் அகலமானது இந்த ராட்சத இடைமுறிவு ரிவர்ஸ் ஃபால்ட் எனப்படும் வகையாகும். இது ஒரு பாறையின் மேல் மற்றொரு பாறையின் நகர்வைக் குறிக்கிறது, இஷிகாவாவில் இடைமுறிவுக்கு அடியில் உள்ள பெரும்பகுதி சரிந்துள்ளது. ஆகவே பிளேட்டுக்குள் இருக்கும் பாறைத்தள இடைமுறிவுகள் அதிகமாக இருந்திருக்கலாம். இது பூகம்பத்தைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பின்னதிர்வுகளை உருவாக்கியிருக்கலாம்’ என்று கூறியுள்ளார்.
பூமியின் மேற்புறத்தோட்டினுள்ளே ஆழமான பகுதிகளில் உள்ள திரவங்களும் பாறைநகர்வுகளுக்குக் காரணமாகி இஷிகாவாவில் பூகம்பங்களை உருவாக்கியிருக்கலாம் என்று மற்றொரு ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த திரவங்கள் பூமியின் மேல்தோட்டு வழியாக மேலே பொங்கி வரும்போது, அவை பாறைத்தளங்களில் உள்ள இடைமுறிவுகளை பலவீனமாக்கி அதை சரிவடையச் செய்திருக்கலாம் என்கின்றன ஆய்வுகள்.
ஜப்பான் ‘பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர்’ என்று அழைக்கப்படும் பூகம்ப நடவடிக்கைகள் அதிகம் உள்ள பகுதியில் அமைந்துள்ளது, இது உலகின் மிகவும் தீவிரமான பூகம்ப டெக்டோனிக் இயக்கப் பகுதி ஆகும். லைவ் சயின்ஸின் அறிக்கையின்படி, இங்கு “உலகின் பல பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் ஏற்படும். இந்த ரிங் ஆஃப் பயர் எனப்படும் பகுதியில் பூமியைத் தாங்கும் பசிபிக் பெரும்பாறை, யூரேசியன் பிளேட், இந்தோ-ஆஸ்திரேலியன் பிளேட் ஆகியவை உள்ளன. இவை ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வதும், ஒன்றின் அடியில் ஒன்று சரிவதும் ஒன்றுடன் ஒன்று உராய்வதும் தினசரி நிகழ்வாக நடைபெறுகிறது. இதனால் பூகம்பங்களும், எரிமலை வெடிப்புகளும் சுனாமிகளும் ஏற்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.