தாமிரபரணியில் வெள்ளம் வந்தது ஏன்?: அன்புமணி புது தகவல்
தாமிரபரணியில் 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பதாக கூறிவிட்டு, கூடுதல் தண்ணீர் திறந்துவிட்டதால் தான் பாதிப்பு ஏற்பட்டதாகவும், ஆக்கிரமிப்பால் தாமிரபரணி ஆற்றின் அகலம் குறுகியதால், தண்ணீர் ஊருக்குள் வந்ததாகவும் பாமக தலைவர் அன்புமணி கூறினார்.நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாமக தலைவர் அன்புமணி நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி கூறியதாவது: இதுபோன்ற பெருமழையை பார்த்ததில்லை என தென் மாவட்ட மக்கள் சொல்கிறார்கள். அரசு அதிகாரிகள் பல்வேறு கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. முதல்வர் மீண்டும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவேண்டும்; அப்போது தான் பணிகள் வேகமெடுக்கும். தாமிரபரணியில் 1 லட்சம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீரை திறந்துவிட்டனர்.
அறிவித்ததை விட கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பால் தாமிரபரணி ஆற்றின் அகலம் குறுகி போய்விட்டது. இதனால், வெள்ளம் ஊருக்குள் வந்துவிட்டது. தமிழகத்தின் ஓர் ஆண்டு சராசரி மழை அளவான 95 செ.மீ மழை, காயல்பட்டினத்தில் ஒரே நாளில் பெய்துள்ளது.
இதுபோன்ற இயற்கை சீற்றங்கள், பருவநிலை மாற்றத்தால் இனி அடிக்கடி வரும் என பலமுறை எச்சரித்துள்ளேன். மீண்டும் இதேபோல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அரசு முறையாக திட்டமிட வேண்டும். மழை எச்சரிக்கையை சரிவர அளிக்கவில்லை எனில் சென்னை வானிலை மையம் எதற்கு? தொழில்நுட்பம் மாறி வரும் நிலையில் சரியான அறிவிப்பை வானிலை மையம்தான் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.