சிறை தண்டனை வழங்கிய நீதிபதி மீது குற்றவாளி பாய்ந்து தாக்கியதால் பரபரப்பு @ லாஸ் வேகாஸ்

தனக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதியை, அவரது மேஜை மீது பாய்ந்து குற்றவாளி ஒருவர் தாக்கிய சம்பவம், அமெரிக்காவின் லாஸ் வேகாஸின் மாகாண நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீதிமன்ற வளாகத்தில் உள்ள கேமராவில் பதிவான இந்த வன்முறைத் தாக்குதல் காட்சிகள் வெளியாகியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான க்ளார்க் கவுன்ட்ரி மாகாண நீதிபதி மேரி கே.ஹோல்தஸ் தனது இருக்கையில் இருந்து பின்னால் சுவரில் விழுந்ததில் சிறு காயம் அடைந்தார். எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு காயங்கள் இல்லை. ஆனால், நீதிபதியின் உதவிக்கு வந்த காவலாளிக்கும் காயம் ஏற்பட்டது. அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்தக் குற்றவாளி, நீதிபதியின் மேஜையின் பின்னால் சிறை அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுடன் சண்டையிடுவதும் வீடியோவில் பதிவாகியிருந்தது.

லாஸ் வேகாஸில் உள்ள மாகாண நீதிமன்றத்தில், அமெரிக்க நேரப்படி புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து நீதிமன்ற அலுவலர்களும், நேரில் பார்த்தவர்களும் கூறுகையில், “குற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், திடீரென பாதுகாப்பு மேஜை மீது பாய்ந்து நீதிபதியின் மேஜை மீதேறி, அவரைக் கடுமையாக தாக்கினார்” என்றனர். இந்தத் தாக்குதல் குறித்து, மாகாண தலைமை வழக்கறிஞர் ரிச்சர்ட் ஸ்கோவ் கூறுகையில், “என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்வதற்குள் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது” என்றார்.

இந்தச் சம்பவத்துக்கு காரணமான குற்றவாளி 30 வயதான டேபோரா டெலோன் ரெட்டன். அவர் பல குற்ற வழக்குகளுக்காகவும், நீதிபதி முதலானோரை தாக்கியது உள்ளிட்ட சில புதிய குற்ற வழக்குகளுக்காகவும் கிளார்க் கவுண்ட்ரி தடுப்பு மையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

முன்னதாக, நீதிமன்றத்துக்கு வந்து தனது வழக்கறிஞர் அல்மாஸுக்கு அருகில் நின்று கொண்டிருந்த ரெட்டன், தன்னைப் பற்றி நீதிபதி கேட்டபோது, “நல்லதை செய்வதற்காக எதையும் செய்யத் தயங்காத நபர். நான் கலகக்காரன் இல்லை. நான் சிறைக்குச் செல்ல வேண்டியவன் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால், நீங்கள் அதுதான் சரியென்று நினைத்தால் நீங்கள் விரும்பிதைச் செய்யலாம்” என்றார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி, ரெட்டனை சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன் என்றுக் கூறியதும், குற்றவாளியின் கையில் நீதிமன்ற காவலாளி கைவிலங்கிட நகர்ந்தார். அப்போது ரெட்டன் உடனடியாக நீதிபதியின் மேஜை மீது பாய்ந்து தாக்குதலில் ஈடுபட்டார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து ரெட்டனின் வழக்கறிஞர் அல்மாஸ் எந்த பதிலும் சொல்லவில்லை. இந்த நிலையில் நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் மேரி ஆன் பிரைஸ் கூறுகையில், “அனைத்து நடைமுறைகளையும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறேன். எங்கள் நீதிபதிகள், பொதுமக்கள் மற்றும் ஊழியர்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *