அமெரிக்கா தலைமையில் 12 நாடுகள்! ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குறிப்பிடப்படாத விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா தலைமையிலான 12 நாடுகள் கூட்டாக எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையொன்றினையும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாவன,
“எங்கள் செய்தி இப்போது தெளிவாக இருக்கிறது. இந்த சட்டவிரோத தாக்குதல்களை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவும், சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பல்கள் மற்றும் பணியாளர்களை விடுவிக்க வேண்டும் என்றும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
மேலும், உலகப் பொருளாதாரம் மற்றும் பிராந்தியத்தின் முக்கியமான நீர்வழிகளில் தடையற்ற வர்த்தகம் ஆகியவற்றை அச்சுறுத்தினால், அதன் விளைவுகளுக்கு ஹவுதிகள் பொறுப்பேற்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிரவும், தாக்குதல்கள் தொடர்ந்தால், கிளர்ச்சியாளர்கள் மீது நேரடித் தாக்குதல் நடத்துவது குறித்து அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் பரிசீலித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குறிப்பிடப்படாத விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா தலைமையிலான 12 நாடுகள் கூட்டாக எச்சரித்துள்ளன.
மேலும், செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் புரியும் அட்டூழியங்களை எதிர்த்து அமெரிக்க இராணுவத்தின் போர் கப்பல்கள் செங்கடல் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இதுவரை 24 முறை செங்கடலில் செல்லும் கப்பல்களை தகர்க்க ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முயற்சி செய்ததாகவும், பலி எண்ணிக்கை எதுவுமின்றி ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை சமாளித்து வருவதாகவும் அமெரிக்க இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அமெரிக்க இராணுவப்படை பிரிவு எக்ஸ் தளத்தில் கருத்து ஒன்றையும் பதிவிட்டுள்ளது. அதில், “தெற்கு செங்கடல் பகுதியில் பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள், சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசி வருகின்றனர், அதனை அமெரிக்க ராணுவம் கடலிலேயே தகர்த்து அழித்து வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இயக்கத்தினர் இடையே இடம்பெறுகின்ற போரில் ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்து, செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.