‘இதுவும் கூட விதிமீறல் தான்’.. காரில் பூ எடுத்து சென்ற வியாபாரிக்கு ரூ.10,000 அபராதம்! ஏன் தெரியுமா?
காரில் பூ எடுத்து சென்ற நாமக்கல் வியாபாரிக்கு சேலம் போக்குவரத்து போலீசார் ரூ.10,000 அபராதம் விதித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனை கண்டித்து அந்த வியாபாரி சாலையில் பூக்களை கொட்டி போராட்டம் நடத்திய நிலையில் அபராதம் விதிக்கப்பட்டது ஏன்? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ராமன். இவர் சொந்தமாக பூக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடைக்கு தேவையான பூக்களை அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து வாங்கி வருவது வழக்கம்.
அந்த வகையில் இன்று ராமன் தனது காரில் சேலம் சென்று சாமந்தி பூவை வாங்கி கொண்டு காரில் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவரது கார் பெங்களூர்-சேலம் நெடுஞ்சலையில் மாமங்கம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் ராமனின் காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் மூட்டை மூட்டையாக சாமந்தி பூ இருந்தது. இதையடுத்து விதிகளை மீறி கார் ஓட்டி வந்ததாக கூறி அவருக்கு போலீசார் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வழக்குப்பதிவு செய்தனர்.
அதாவது கார் உள்ளிட்டவை மனிதர்களின் பயன்பாட்டுக்கான வாகனம். ஆனால் பூ உள்ளிட்ட சரக்குகளை சரக்கு வாகனங்களில் தான் ஏற்றி செல்ல வேண்டும். அதேபோல் சரக்கு வாகனத்தில் மக்கள் பயணம் செய்யக்கூடாது. தற்போது காரில் பூக்களை மூட்டை மூட்டையாக ஏற்றி சென்றது விதிமீறல் என தெரிவித்து போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
ராமன் கெஞ்சியும் போலீசார் விடவில்லை. இதையடுத்து ராமன் சேலத்தில் இருந்து காரில் நாமக்கல் வந்த நிலையில் தனது தாய் மீனாவுடன் சேர்ந்து பூக்களை கலெக்டர் அலுவலகத்தின் முன்பு கொட்டி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். சொந்தமாக கார் வாங்கி பூக்களை வாங்கி வருவது எப்படி விதிமீறலாகும். இந்த அபராத தொகையை ரத்து செய்து வழக்கை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பூ உள்ளிட்ட சரக்குகளை காரில் எடுத்து செல்வது சட்டப்படி குற்றம். அதனால் தான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மீண்டும் விளக்கி கூறினர். இதையடுத்து ராமன் அங்கிருந்து தனது தாய் மீனாவுடன் பூக்களை அள்ளிக்கொண்டு கலைந்து சென்றார். இந்த சம்பவம் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.