டெஸ்லாவை விடுங்க தமிழகத்திற்கு வரப்போகும் புதிய இவி ஆலை! எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?
டெஸ்லா நிறுவனம் தமிழகத்தை விட்டு விட்டு குஜராத் மாநிலத்திற்கு செல்ல உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது வியட்நாம் நாட்டைச் சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் ஒன்று தமிழகத்தில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
அதுவும் மிக வித்தியாசமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நிறுவனம் தனது கார் தயாரிப்பு ஆலையை நிறுவ முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வரப்போவதாக செய்தி வெளியான முதல் எந்த மாநிலத்தில் அந்நிறுவனம் தயாரிப்பு ஆலையை நிறுவும் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. சென்னை போன்ற துறைமுக வசதி மற்றும் அனைத்து வசதிகளும் கொண்ட இடத்தில் தான் அதன் ஆலையை நிறுவ வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவின. இதனால் டெஸ்லா ஆலை தமிழகத்திற்கு வர அதிகமான வாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசி நேரத்தில் குஜராத் மாநிலத்தில் தான் டெஸ்லா நிறுவனம் ஆலையை அமைக்க போவதாக தெரியவந்துள்ளது. இதன்படி குஜராத்தில் நடக்க உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் இது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என செய்திகள் வெளியானது. இதனால் தமிழகத்திற்கு வர வேண்டிய ஆலையை குஜராத் மாநிலம் தட்டி சென்று விட்டது என்S மக்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்நிலையில் இதற்கு ஒரு சமாதானம் தெரிவிக்கும் வகையாக தற்போது தமிழகத்திற்கு நற்செய்தி கிடைத்துள்ளது.
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் வின்ஃபாஸ்ட் இந்நிறுவனம் இந்தியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் தனது ஆலையை நிறுவி வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இந்த ஆலை தமிழகத்தில் அமையவுள்ளது. வழக்கமாக தமிழகத்தை தேர்வு செய்யும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பெரும்பாலும் பெங்களூருவை ஒட்டி உள்ள மாநிலங்கள் அல்லது சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் தான் தனது ஆலையை அமைத்து வாகனத்தை அனுப்பி விடுவார்கள்.
ஆனால் வின்ஃபாஸ்ட் நிறுவனம் சற்று வித்தியாசமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தனது ஆலையை அமைத்து வாகன உற்பத்தியில் ஈடுபட முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் முதன்முதலாக இந்தியாவில் களமிறங்க நினைக்கும் போது வியட்நாமில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் தயாரிக்கும் வாகன உதிரி பாகங்களை எல்லாம் இந்தியாவில் இறக்குமதி செய்து இந்தியாவில் அதற்கான அசெம்பிளி ஆலைகளை அமைத்து இந்தியாவில் அந்த வாகனங்களை அசெம்பிள் செய்து விற்பனைக்கு கொண்டு வர வேண்டும் என நினைத்தது.
ஆனால் தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் அமைக்கப் போகும் ஆலை இந்த அசெம்பிள் ஆலை கிடையாது அதற்கு பதிலாக பேட்டரி தயாரிப்பு ஆலையை அமைக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. அங்கு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரியை தயாரித்து இந்தியாவிலும் அதே நேரம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தற்போது தீவிரமாக நடந்து வருவதாக தெரிகிறது.
வின்ஃபாஸ்ட் நிறுவனம் இதை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஆனால் விரைவில் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அனைத்து ஆவணங்களையும் முறையாக பதிவு செய்துவிட்டு இந்த அறிவிப்புகளை எல்லாம் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் வட மாவட்டங்களை விட்டுவிட்டு தென் மாவட்டத்தில் இந்நிறுவனம் ஒரு ஆலையை திறக்க நினைத்திருப்பது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது.
இதுபோக இந்நிறுவனம் தமிழகத்திலேயே வாகனத்தை அசெம்பிள் செய்யும் ஆலையையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக இந்த ஆலை உருவாக்கப்பட்டால் அதில் ஆண்டுக்கு 50 ஆயிரம் கார்களை தயாரிக்கும் திறன் கொண்டதாக இந்த ஆலை உருவாக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதற்காக நிறுவனம் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான முதலீட்டை தமிழகத்திற்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு வாகன உற்பத்தியில் மிகச்சிறந்த மாநிலமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் தான் எலெக்ட்ரிக் வாகனங்களில் ஆலைகள் அதிகமாக உள்ளன ஓலா,ஏத்தர்,சிம்பிள் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் எல்லாம் தமிழகத்தில் இயங்கி வரும் நிலையில் தற்போது வின்ஃபாஸ்ட் நிறுவனமும் தமிழகத்தில் இயங்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிற்கு டெஸ்லா நிறுவனம் வரும்போது தமிழகத்திற்கு வரும் என பெரும் ஆவளுடன் தமிழக மக்கள் காத்திருந்தனர். ஆனால் அது குஜராத் மாநிலத்திற்கு செல்ல போகிறது என்ற செய்தி வெளியானவுடன் தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. ஆனால் இது நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. உடனடியாக வியட்நாம் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் தமிழகத்திற்கு வரப்போவதாக வந்த செய்தி பெறும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.