பருந்தாகுது ஊர்க்குருவி.. கார் சேல்ஸில் 2வது இடத்தில் இந்தியாவின் டாடா மோட்டார்ஸ்! ஹூண்டாய்க்கு நேரம் சரியில்ல
இந்தியாவில் கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் வழக்கம்போல் இலட்சக்கணக்கில் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த முதல் 10 நிறுவனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
வழக்கம்போல், கடந்த 2023 டிசம்பர் மாதத்திலும் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனமாக மாருதி சுஸுகி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் நம்பர் ஒன் கார் பிராண்டாக விளங்கும் மாருதி சுஸுகி கடந்த மாதத்தில் மொத்தம் 1,04,778 கார்களை விற்பனை செய்து உள்ளது.
ஆனால், 2022ஆம் ஆண்டில் இதே டிசம்பர் மாதத்தில் 1,12,010 கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் கடந்த டிசம்பர் மாதத்தில் மாருதி கார்களின் விற்பனை 6.46% குறைந்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில் கடைசி டிசம்பர் மாதத்தில் மட்டுமே இவ்வாறு மாருதி சுஸுகி கார்களின் விற்பனை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
அதேபோல், கடந்த டிசம்பர் மாத கார்கள் விற்பனையில் மற்றொரு ஆச்சிரியமும் நடந்துள்ளது. அதாவது, நீண்ட மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2வது இடத்தை பிடித்துள்ளது. இருப்பினும், மாருதி சுஸுகி உடன் ஒப்பிடுகையில் பெரிய இடைவெளி உடன் 2வது இடத்தில் டாடா உள்ளது.
ஏனெனில், கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டாடா கார்களின் எண்ணிக்கை 43,471 ஆகும். 2022 டிசம்பரில் 40,045 கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் உள்நாட்டில் விற்பனை செய்திருந்தது. இதன்படி பார்க்கும்போது, டாடா கார்களின் விற்பனை 2022 டிசம்பரை காட்டிலும் 8.56% அதிகரித்துள்ளது.
வழக்கமாக இந்த வரிசையில் 2வது இடத்தை பிடிக்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் கடந்த டிசம்பர் மாத விற்பனையில் 3வது இடத்திற்கு சரிந்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் கார்களின் எண்ணிக்கை 42,750 ஆகும். ஆனால், 2022 டிசம்பரில் 40 ஆயிரம் ஹூண்டாய் கார்கள் கூட விற்பனையாகவில்லை. அப்படியென்றால், 2022 டிசம்பர் மாதத்திலும் கார்கள் விற்பனையில் ஹூண்டாயை டாடா முந்தி இருந்தது.